நடு இரவு தாண்டிய வேளையில், ஜேம்ஸ் என்ற மீனவன் மீன்களைப் பிடிப்பதற்காக கடலில் படகைச் செலுத்திக் கொண்டிருக்கின்றான். அந்த அதிகாலை வேளையையும் அவன் பொருட்படுத்தவில்லை. “நான் மீன் பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு என்னுடைய வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது, எனக்கு வருமானம் தரக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை” என்று அவன் கூறினான். இப்பொழுது கடல் பாதுகாப்பு இயக்கத்தில், ஒரு உறுப்பினராக இருப்பதால், அவனுடைய வருமானமும் அதிகரித்துள்ளது, நிலையான வருமானமும் வருகின்றது, “இந்த செயல் திட்டத்தைத் துவக்கித் தந்த தேவனுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம்” என்றும் கூறினான்.
இந்த திட்டம் பெரிய அளவில் உருவானது, ஏனெனில், இந்த திட்டத்திற்குத் தேவையானவற்றை தேவனுடைய படைப்புகள் கொடுத்தன – அவை இயற்கையில் கிடைக்கும் கடல் உயிரினங்கள். எல்லாம் தருகின்ற தேவனை துதித்து, “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்” (சங்.104:14). “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும், பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு (வச. 25).
தேவனுடைய ஆச்சரியமான படைப்புகள் நமக்குத் தேவையானவற்றைத் தருகின்றன, இது எத்தனை அற்புதமானது! எடுத்துக் காட்டாக மீன்கள் ஒரு சுகாதாரமான கடல் உணவைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்த மீன்களைப் பாதுகாப்பாக பிடிப்பதன் மூலம், ஜேம்ஸ் மற்றும் அவனுடைய சுற்றத்தாருக்கும் வாழ்வாதாரம் கிடைக்கின்றது.
தேவனுடைய படைப்புகள் எல்லாமே ஒரு நோக்கத்தோடு தான் படைக்கப்பட்டுள்ளன, அவை எல்லாவற்றையும் தேவன் தன்னுடைய மகிமைக்காகவும் நம்முடைய நன்மைக்காகவும் பயன்படுத்துகின்றார். இவ்வாறு சங்கீதக்காரன், “நான் உயிரோடு இருக்கும் மட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்” (வச. 33) என்கின்றார், நாமும் தேவன் நமக்குத் தந்துள்ள யாவற்றையும் நாம் சிந்தித்துப் பார்த்து, நாமும் அவரைப் போற்றுவோம்.
தேவன் தன்னுடைய படைப்புகளின் மூலம் என்னென்ன வழிகளில் உன்னை போஷிக்கின்றார்? இதற்காக அவருக்கு எப்படி நன்றி சொல்லப் போகின்றாய்?
ஓ படைப்பின் கர்த்தாவே, உம்முடைய பரந்து விரிந்த படைப்புகளையும், நீர் எங்களின் தேவைகளைப் போஷிக்கின்ற வகையையும் நாங்கள் பார்க்கும் போது, எங்களை வெகுவாக தாழ்த்துகின்றோம்.