வீட்டைச் சுத்தப்படுத்தும் சேவை மையத்தின் முதலாளியான டெபி, தன்னுடைய தொழிலை விரிவாக்கும் நோக்குடன் அதிக வாடிக்கையாளர்களைத் தேடிக் கொண்டிருப்பாள். அவளுக்கு ஓர் அழைப்பு வந்த போது, ஒரு பெண் அவளோடு தொடர்பு கொண்டாள். அவள், “என்னால் இதற்காகும் தொகையை இப்பொழுது கொடுக்க முடியாது; நான் தற்சமயம் புற்று நோய் சிகிச்சையில் இருக்கின்றேன்” என்றாள். அதிலிருந்து டெபி, “புற்று நோய் சிகிச்சையில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை, அவர்களுக்கு இலவசமாக சுத்தப்படுத்தும் சேவை செய்யப்படும்” என்று தீர்மானித்தாள். எனவே, 2005 ஆம் ஆண்டு, அவள் ஒரு லாப நோக்கமில்லாத, வீடு சுத்தப்படுத்தும் சேவையை ஆரம்பித்தாள், இதன் வழியாக நிறுவனங்கள் தங்கள் நன்கொடைகள் மூலம் புற்று நோயால் அவதியுறும் பெண்களுக்கு இலவசமாக சுத்தப்படுத்தும் சேவையை வழங்கினர். இத்தகைய சேவையைப் பெற்ற ஒரு பெண், சுத்தமாக்கப்பட்ட தன் வீட்டிற்குத் திரும்பிய போது, தனக்குள் ஒரு பெரிய தன்நம்பிக்கையைப் பெற்றாள். அவள், “முதல் முறையாக, நான் புற்று நோயையும் விரட்ட முடியும் என்று நம்ப ஆரம்பித்தேன்” என்றாள்.
நாம் பாதுகாக்கப்படுகின்றோம், ஆதரவளிக்கப் படுகின்றோம் என்ற உணர்வு, நாம் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ள உதவியாயிருக்கும். தேவனுடைய பிரசன்னமும், ஆதரவும் நமக்குண்டு என்ற எண்ணம், நமது ஆவியில் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுக்கின்றது. சோதனைகளின் வழியாகக் கடந்து செல்லும் அநேகரின் விருப்பமான சங்கீதம் 46 நமக்குச் சொல்வது, “தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்”, “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்;……பூமியிலே உயர்ந்திருப்பேன். சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்” (வச. 1,10-11).
தேவன் தரும் வாக்குத்தத்தங்களை நினைவுகூர்வதும், அவருடைய பிரசன்னம் நம்மோடிருந்து, நமக்கு உதவியாயிருக்கின்றது என்ற எண்ணமும் நம் இருதயங்களை புதுப்பிக்கின்றன, கடினமான வேளைகளைக் கடந்து செல்வதற்கு ஊக்கமும் நம்பிக்கையையும் தருகின்றன.
எந்தச் சோதனைகளை மேற்கொள்ள, தேவனுடைய பெலனைச் சார்ந்து வாழ்கின்றாய்? எந்த வேத வசனங்கள் உனக்கு உதவியாக இருக்கின்றன?
தேவனே, உம்முடைய பிரசன்னத்தையும், வாக்குத்தத்தையும் தந்தமைக்காகவும், உம் பேரில் உள்ள நம்பிக்கையை, நான் என் வாழ்வில் காட்ட, உம்முடைய பெலன் என்னைத் தாங்குவதற்காகவும் நன்றி கூறுகின்றேன்.