மரண வரிசையிலும் மகிழ்ச்சி
1985 ஆம் ஆண்டு, அன்டொனி ரே ஹின்டன் என்பவர், இரண்டு உணவக மேலாளர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார், அவர் இக்குற்றத்தைச் செய்ததாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டார். அவர், இந்த கொலைகள் நடந்த போது, அவ்விடத்திலிருந்து பல மைல்களுக்கு அப்பால் இருந்தார், ஆனாலும் அவர் குற்றவாளியென தீர்க்கப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டார். அவருடைய விசாரணையின் போது, ரே தன் மீது பொய் குற்றம் சாட்டியவர்களை மன்னித்தார், தனக்கு இந்த அநீதி இழைக்கப் பட்ட போதும், தனக்குள் மகிழ்ச்சியிருப்பதாகக் கூறினார். “என்னுடைய மரணத்திற்குப் பின், நான் பரலோகத்தை அடைவேன், நீ எங்கு சென்று கொண்டிருக்கின்றாய்?” என்று கேட்பார்.
சாவின் வரிசையில் நின்றுகொண்டிருந்த ரே ஹின்டனுக்கு வாழ்க்கை கடினமாயிருந்தது. சிறைச்சாலையின் விளக்குகள் ஒளிர்ந்து, மற்றவர்களுக்கு மின் நாற்காலியில் மரணத் தண்டனை நிறைவேற்றப்படுவதைக் காட்டியது, தனக்கும் நடைபெறக் காத்திருப்பதை அது தெரிவித்தது. பொய்யைக் கண்டுபிடிக்கும் சோதனைக்கு ரே உட்படுத்தப்பட்டார், ஆனால் அதின் முடிவுகள் புறக்கணிக்கப்பட்டன. அவர் சந்தித்த அநேக அநீதச்செயல்களில் ஒன்று அவரை மீண்டும் விசாரணைக்குட்படுத்தியது.
கடைசியாக, 2015ஆம் ஆண்டு, அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம், ரேயின் மீதிருந்த தீர்ப்பை மாற்றியது. அவர் ஏறத்தாள முப்பது ஆண்டுகளாக, சாவின் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதற்கு அவருடைய வாழ்வு ஒரு சாட்சியாக அமைந்தது. இயேசு கிறிஸ்துவின் மீது அவருக்கிருந்த விசுவாசம், அவருடைய சோதனைகளுக்கு அப்பால் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது (1 பேது. 1:3-5), அவருக்கிழைக்கப்பட்ட அநீதத்தின் மத்தியிலும் அசாதரணமான மகிழ்ச்சியை அநுபவித்தார் (வச. 8). “நான் சிறைச்சாலையில் இருந்தபோதும், எனக்குள் இருந்த இந்த மகிழ்ச்சியை அவர்களால் எடுத்துவிட முடியவில்லை” என்று ரே விடுதலையான போது கூறினார். இந்த மகிழ்ச்சி, தேவன் மீது அவருக்கிருந்த உண்மையான விசுவாசத்தை நிரூபித்தது (வச. 7-8).
மரண வரிசையிலுமா மகிழ்ச்சி? இதன் நுணுக்கத்தை அறிந்து கொள்வது கடினம் தான். இது நம்மை தேவனுக்கு நேராகத் திருப்புகின்றது. அவரை நாம் கண்களால் காணமுடியாவிட்டாலும், அவர் நம்மோடு இருக்கின்றார், நம்முடைய துன்ப நேரங்களில் நம்மைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்.
நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே
என்னுடைய நண்பன் ராபர்ட் மற்றும் அவனுடைய மனைவி காலின் ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக ஒரு மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வை நடத்தி வருகின்றனர். அவர்களின் பரிமாற்றங்களை கவனிப்பது, எனக்கு மிகவும் விருப்பமாயிருக்கும். உணவு வேளையின் போது, ஒருவர் மற்றவருக்கு வெண்ணையை கொடுப்பார், அடுத்தவர் சரியானவேளையில் டம்ளரில் தண்ணீரை நிரப்புவார், ஒருவர், ஒரு கதையையின் வாக்கியத்தை ஆரம்பிப்பார், மற்றவர் அதனை முடிப்பார். சில வேளைகளில், ஒருவர் மற்றவரின் மனதை வாசிப்பதைபோலக் காணப்படும்.
நாம் நேசிக்கும் எந்த நபரைக் காட்டிலும் தேவன் நம்மை அறிந்துள்ளார், நம்மைப் பாதுகாக்கிறார் என்பது எத்தனை ஆறுதலளிப்பதாக உள்ளது. தேவனுடைய ராஜ்யத்தில், தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள மென்மையான, ஆழ்ந்த உறவினைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு விளக்குகின்றார். “அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்” (ஏசா. 65:24). என்கின்றார்.
ஆனால் இது எப்படி உண்மையாக முடியும்? நான் அநேகக் காரியங்களைக் குறித்து வருடக்கணக்காக ஜெபித்தும் பதிலைப் பெறவில்லையே என்று நாம் நினைக்கலாம். நாம் தேவனோடு நெருங்கி வாழும் போது, நம்முடைய இருதயத்தை அவருடைய இருதயத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் போது, அவருடைய நேரத்தையும், பாதுகாப்பையும் நம்பி வாழக் கற்றுக் கொள்வோம். தேவனுடைய விருப்பதிற்கேற்ப கேட்க நாம் கற்றுக் கொள்வோம். ஜெபிக்கும் போது, நாம் கேட்கும் அநேகக் காரியங்களோடு, ஏசாயா 65ல் குறிப்பிட்டுள்ள படி, தேவனுடைய ராஜ்யத்திற்கு ஏற்றவைகளைக் கேட்க கற்றுக் கொள்வோம்; நம்முடைய துயரம் முடிந்து போகும்படியும் (வ.19), பாதுகாப்பான வீடுகள் அமையும்படியும், திருப்தியான உணவும், அனைவருக்கும் மன திருப்தியளிக்கும் வேலையும் கிடைக்கவும் (வச. 21-23), இவ்வுலகத்திற்குச் சமாதானம் (வச. 25) கிடைக்கும் படியாகவும் கேட்க கற்றுக் கொள்வோம். தேவனுடைய ராஜ்யம் பூரணமாகும் போது, தேவன் இத்தகைய ஜெபத்திற்கு முற்றிலும் பதிலளிப்பார்.
வியத்தகு திறமை
எங்கள் கல்லூரி பாடகர் குழுத் தலைவர், குழுவை வழிநடத்துவதோடு, எங்களோடு இணைந்து பியானோவிலும் வாசிப்பார், அற்புதமாக இவ்விரு பொறுப்பையும் ஒரே நேரத்தில் கையாளுவார். ஓர் இசை நிகழ்ச்சி முடிவுற்ற போது, அவர் மிகவும் சோர்வுற்றுக் காணப்பட்டார், எனவே நான் அவரை விசாரித்தேன், “இதற்கு முன்பு, இவ்வாறு செய்வதற்கு நேர்ந்ததேயில்லை” என்றார். மேலும், “இந்த பியானோவின் சுருதி இசையோடு பொருந்திவரவில்லை, ஆதலால் நான் இந்த முழு நிகழ்ச்சியிலும் இரண்டு பியானோக்களை பயன்படுத்தவேண்டியதாயிற்று, என்னுடைய இடது கை ஒரு பியானோவிலும், வலது கை மற்றொரு பியானோவிலும் வாசித்தன!” என்றார். அவரின் வியத்தகு திறமையை நினைத்து அதிசயித்தேன், மனிதனுக்குள் இத்தகைய திறமைகளைத் தந்த தேவனின் அற்புத வல்லமையை நினைத்து வியந்தேன்.
“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப் பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” (சங். 139:14) என இச்சங்கீதத்தை எழுதின தாவீது அரசன் தன்னுடைய வியப்பை வெளிப்படுத்துகின்றார். மனிதனின் திறமைகளையும், இயற்கையின் அற்புதங்களையும் நான் பார்க்கும் போது, படைப்புகளின் அதிசயம், என்னை படைப்பாளியின் மகத்துவத்தை நினைத்து வியக்கச் செய்கின்றது.
ஒரு நாள் நாம் தேவனுடைய சமுகத்தில் நிற்கும் போது, வெவ்வேறு தலைமுறையிலிருந்தும் வந்த ஜனங்கள், “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாய் இருக்கிறது” (வெளி.4:11) என்பார்கள். அவர் நமக்குத் தந்துள்ள வியத்தகு திறமைகளும், அவர் படைத்த அழகிய உலகமும், அவரே ஆராதிக்கத் தகுந்தவர் எனக் காட்டுகின்றன.
பில்லுக்கான பணம் செலுத்தப்பட்டுவிட்டது
“உனக்கு என்னவாயிற்று?” என்று கேட்டார், நைஜீரியாவைச் சேர்ந்த பீட்டர் என்ற தொழிலதிபர். அவர் லோகாஸ் என்ற இடத்திலுள்ள ஒரு மருத்துவ மனையில், ஒரு படுக்கையில் படுத்திருப்பவரைக் குனிந்து பார்த்தவண்ணம் இவ்வாறு கேட்டார். “யாரோ ஒருவர் என்னைச் சுட்டு விட்டார்” என்றான் அந்த இளைஞன். அவனுடைய தொடையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. அந்த இளைஞன் வீட்டிற்கு திரும்பக் கூடிய அளவுக்கு சுகமாகியிருந்தாலும், அவனுடைய பில் தொகையைக் கட்டினால் தான் அவன் அங்கிருந்து விடுவிக்கப் படுவான். அவ்விடத்திலுள்ள அரசு மருத்துவ மனைகள் இத்தகைய ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தன. ஒரு சமுக சேவை செய்பவரைக் கலந்தாலோசித்தபின், பீட்டர் தன் பெயரைத் தெரிவிக்காமல், தன்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில், தான் ஏற்கனவே ஆரம்பித்து வைத்திருந்த தரும நிதியிலிருந்து, அந்த பில்லுக்கான தொகை முழுவதையும் செலுத்திவிட்டார். இந்த ஈவைப் பெற்றவர்கள் ஒரு நாள் தாங்களும் மற்றவர்களுக்கு இத்தகைய ஈவைக் கொடுப்பார்கள் என்று நம்பினார்.
தேவன் நமக்குத் தரும் செல்வத்திலிருந்து கொடுப்பதைக் குறித்து வேதாகமத்தில் அநேக இடங்களில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேலர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் எப்படி வாழ வேண்டுமென மோசே கூறும்போது, முதலாவது தேவனுக்குக் கொடுக்க வேண்டும் என்கின்றார் (உபா. 26:1-3), பின்னர், தேவையிலிருப்போரைக் கவனிக்குமாறு அறிவுறுத்துகிறார், அந்நியருக்கும், திக்கற்ற பிள்ளைகளுக்கும், விதவைகளுக்கும் கொடுக்குமாறு கூறுகின்றார் (வ.12). அவர்கள் “பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில்” (வச. 15) வாழ்வதால், தேவனுடைய அன்பை தேவையிலிருப்போருக்குக் காட்டுமாறு சொல்கின்றார்.
நாமும் நம்மிடமுள்ள பொருட்களை, சிறிதோ பெரிதோ, பிறரோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் தேவனுடைய அன்பை பிறருக்குக் காட்டுவோம். பீட்டர் கொடுத்தது போல நம்மால் நேரடியாக கொடுக்கச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால், நாம் தேவனிடம் கேட்போம், நாம் உதவி செய்யத் தேவையானவர்களையும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் தேவன் காட்டும் படி அவரிடம் கேட்போம்.