சண்டை மீன் ஒன்றை எங்களுடைய வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வந்தோம். அதனுடைய தொட்டியில் உணவு போடும் போதெல்லாம், என்னுடைய இளைய மகள் குனிந்து, அதனோடு பேசுவாள். அவளுடைய மழலையர் பள்ளியில் செல்லப் பிராணிகளைப் பற்றிய பேச்சு வந்த போது, அதனை தன்னுடையதாக பெருமையுடன் கூறிக் கொண்டாள். ஒரு நாள், அந்த மீன் மரித்துப் போனது, என்னுடைய மகளும் மனமுடைந்து போனாள்.
என்னுடைய மகளின் உணர்வுகளை சற்று நெருக்கமாக கவனித்து, அவளிடம், “அதைக்குறித்து, தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்” எனத் தெரிவிக்குமாறு என்னுடைய தாயார் கூறினார். தேவன் எல்லாவற்றையும் அறிவார் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன், ஆனால், அது எவ்வாறு ஆறுதலளிப்பதாக இருக்க முடியும்? தேவன் நம்முடைய வாழ்வில் நடைபெறுகின்ற காரியங்களைத் தெரிந்திருப்பவர் மட்டுமல்ல, அவர் இரக்கத்தோடு நம்முடைய ஆத்துமாவைப் பார்க்கின்றார், இவைகள் நம் ஆன்மாவை எப்படி பாதிக்கும் என்பதையும் அவர் அறிவார். நம்முடைய வயது, கடந்தகால காயங்கள், பணபற்றாக்குறை ஆகியவற்றின் அடிப்படையில் “சிறிய காரியங்கள்” கூட பெரியதாகத் தோன்றுவதையும் அவர் அறிவார். தேவாலயத்தின் காணிக்கைப் பெட்டியில், ஏழை விதவை இரண்டு காசுகளைப் போட்ட போது, அந்தக் காணிக்கையின் அளவையும், அவளுடைய இருதயத்தையும் அவர் அறிந்திருந்தார். அது அவளுக்கு எப்படிப் பட்டது என்பதை அவர் விளக்கினார், “மற்றெல்லாரைப் பார்க்கிலும், இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள். இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள்” (மாற். 12:43-44) என்றார்.
அந்த விதவை தன்னுடைய சூழ்நிலையைப் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் அவள் கொடுத்த மிகச் சிறிய நன்கொடையை, இயேசு, அவள் செய்த தியாகமாகக் கருதினார். இதேப் போன்றே அவர் நம்முடைய வாழ்வையும் பார்க்கின்றார், அவருடைய அளவற்ற ஞானத்தினால் நாம் ஆறுதலையும் பெற்றுக்கொள்வோம்.
“சிறிய” பிரச்சனையினால் மனமுடைந்து காணப்படும் ஒருவருக்கு எப்படி இரக்கத்தைக் காட்டப் போகின்றாய்? உன்னுடைய பிரச்சனைகளை தேவனிடம் தெரியப்படுத்திய போது, அவர் உனக்கு எவ்வாறு உதவினார்?
தேவனே, என்னை முற்றிலும் அறிந்து, என்னை நேசிக்கிற படியால் உமக்கு நன்றி கூறுகின்றேன். நீர் என்னுடைய வாழ்வை முற்றிலும் அறிந்து வைத்திருக்கின்றபடியால், நீர் தரும் ஆறுதலையும் உணர்ந்து கொள்ள எனக்கு உதவியருளும்.