எங்களுடைய சிறிய பேரன் கரமசைத்து விடை பெற்றான், பின்னர் அவன் திரும்பிப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான். “பாட்டியம்மா, நாங்கள் போகும் வரை நீங்கள் ஏன் முற்றத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான். நான் அவனைப் பார்த்துச் சிரித்தேன், அவன் மிகவும் சிறியவனாகையால், அவனுடைய கேள்வியை மிகவும் ரசித்தேன். அவன் எங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை எண்ணிப் பார்த்து, அவனுக்கு ஒரு நல்ல பதிலைக் கொடுக்க விரும்பினேன், “அது ஒரு வகை மரியாதை” என்றேன். “நீ எனக்கு விருந்தாளியாக வந்திருக்கும் போது, நீ போகும் வரை உன்னை கவனித்துக் கொண்டிருப்பது, நான் உன் மீது கரிசனைக் கொண்டுள்ளேன் என்பதைக் காட்டுகின்றது” என்றேன். அவன் என்னுடைய பதிலை ஏற்றுக் கொண்ட போதும் சற்று கலக்க மடைந்தவனாய் காணப்பட்டான். எனவே நான் ஒரு எளிய உண்மையை அவனுக்கு எடுத்துக் கூறினேன். “நான் உன்னை நேசிப்பதால் உன்னைக் கவனிக்கிறேன், உங்களுடைய கார் சென்று கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்குச் செல்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்வேன்” என்றேன். அவன் சிரித்தான், என்னை அன்போடு அணைத்துக்கொண்டான். கடைசியாக, அவன் புரிந்துகொண்டான்.
அவனுடைய குழந்தைத்தனமான புரிந்து கொள்ளல், நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்கு அறிவுறுத்தியது, நம்முடைய பரலோகத் தந்தை, அவருடைய விலையேறப் பெற்ற பிள்ளைகளாகிய நம் அனைவரையும் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றார், சங்கீதம் 121ல் கூறப்பட்டுள்ளபடி, “கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்” (வச. 5). தேவனை ஆராதிக்கும்படி எருசலேம் நோக்கிப் பயணம் செய்த இஸ்ரவேலர், ஆபத்தான பாதை வழியே பயணித்த போது, தேவன் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார், “பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார் (வச. 6-7). என்று உறுதியளித்தார். இதேப் போன்று, நம்முடைய வாழ்க்கையாகிய பயணத்தின் போதும், நாம் ஆவிக்குரிய அச்சுறுத்தல்களையும், தீமைகளையும் சந்திக்க நேரிடும், “கர்த்தர் உன் போக்கையும், உன் வரத்தையும்” காப்பார், ஏன்? அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு. எப்பொழுது? “இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்” (வ.8).
உன்னுடைய வாழ்க்கையில், எந்த “மலையின்” வழியாக நீ ஏறிக் கொண்டிருக்கிறாய்? தேவன் உன்னைப் பாதுகாக்கிறார் என்ற உறுதியைப் பெற்றுள்ளாயா?
எங்கள் அன்பின் தந்தையே, எங்கள் வாழ்க்கைப் பாதையில், எங்கள் பயணத்தைப் பாதுகாத்து, எங்களை பத்திரமாக வைத்திருக்கிறதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்