1997 ஆம் ஆண்டு, ஹவாயில் நடைபெற்ற அயர்ன் மன் டிரையத்லான் போட்டியில், (மிதிவண்டி ஓட்டுதல், நீந்துதல், ஓடுதல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு விளையாட்டு) இரண்டு பெண்கள், தங்கள் பாதங்களால் நிற்கக் கூட பெலனற்றவர்களாய், தடுமாறியபடியே எல்லைக் கோட்டை நெருங்கினர். மிகவும் சோர்வடைந்த இந்த ஓட்ட வீரர்கள், தங்களின் நிலையற்ற கால்களோடு, விடாமுயற்சியோடு ஓடிக்கொண்டிருந்தபோது, சியான் வெல்ச் தடுமாறி வென்டி இன்கிரஹாம் மீது மோதிக் கொண்டாள், அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். போராடி எழுந்திருந்த அவர்கள், இலக்கினை அடைய இன்னும் இருபது மீட்டர் தொலைவே இருந்த நிலையில், மீண்டும் முன்புறம் விழுந்தனர், வென்டி தவழ்ந்து செல்ல ஆரம்பித்த போது, பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பினர். அவளுடைய போட்டியாளரும் அவளைப் பின் தொடர, பார்வையாளர்கள் சத்தமாக அவர்களை உற்சாகப்படுத்தினர். வென்டி நான்காவதாக எல்லைக் கோட்டைத் தாண்டி, அவளுடைய ஆதரவாளர்களின் கரங்களில் வீழ்ந்தாள், அப்பொழுது அவள் தன்னோடு தடுமாறிய சகோதரிக்கு கரத்தை நீட்டினாள், சியான் முன்னோக்கி வந்து தன்னுடைய தளர்ந்த கரங்களை நீட்டி, வென்டியின் கரங்களைப் பற்றியவாறே எல்லைக் கோட்டைத் தொட்டாள், அவள் ஐந்தாவதாக ஓட்டத்தை முடித்தபோது, கூட்டத்தினர் ஆரவாரத்தோடு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
இந்த ஜோடி, 140 மைல் தூரத்தை கடந்து முடித்தக் காட்சி அநேகரைக் கவர்ந்தது. வலுவிழந்தபோதும் விடாமுயற்சியோடு இருவர் இணைந்து போராடிய அந்தக் காட்சி என் மனதை விட்டு அகலவேயில்லை, பிரசங்கி 4:9-11ல் கூறப்பட்டுள்ள வாழ்விற்கு புத்துணர்ச்சியூட்டும் உண்மையை இது உறுதிப் படுத்துகின்றது.
நம்முடைய வாழ்விலும் நமக்கு ஒரு உதவியாளர் தேவை என்பதை நாம் ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை (வ.9). நம்முடைய தேவைகளை, எல்லாம் அறிந்த தேவனிடமிருந்து நாம் மறைத்துக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு வேளையில் நாம் அனைவருமே உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கீழேவிழ நேரலாம். நாம் எழுந்திருக்க முயற்சிக்கும் போது, நாம் தனியாக இல்லை என்பது நமக்கு ஆறுதலைத் தரும். நம்முடைய அன்புத்தந்தை நமக்கு உதவிசெய்கின்றார், நாம் மற்றவர்களுக்கும் உதவும் படி நம்மை பெலப்படுத்துகின்றார், அவர்களும், தாங்களும் தனியாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவர்.
யாரோ ஒருவர் உனக்கு எப்படி உதவினார்? இந்த வாரத்தில் மற்றவர்களை எப்படி ஊக்கப்படுத்தப் போகின்றாய்?
சர்வ வல்ல தேவனே, நீர் எப்பொழுதும் எங்களோடு இருந்து எங்களுக்கு உதவுகின்றீர் என்ற உறுதியை எங்களுக்குத் தந்தமைக்காகவும், மற்றவர்களுக்கு உதவும் படி எங்களுக்குச் சந்தர்ப்பங்களைத் தருவதற்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன்.