சில வேளைகளில் என்னுடைய பூனை ஹீத்கிளிஃப், FOMO (Fear Of Missing Out) என்பதால் பாதிக்கப்படும். நாம் எதையாவது பார்க்காமல் விட்டு விடுவோமோ என்ற பயத்திலேயே வாழும் இந்த வியாதியினால், அது கஷ்டப்படுவதாக நான் நினைக்கிறேன். நான் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வரும் போது, ஹீத்கிளிஃப் வேகமாக வந்து, நான் வாங்கி வந்துள்ளவற்றை ஆய்வு செய்யும், நான் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கும் போது, அது தன்னுடைய பின்னங்கால் பாதங்களில் நின்றுகொண்டு, நான் வைத்திருப்பவற்றை உற்றுப்பார்க்கும், நான் அவற்றை அதனோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கும். நான் அவற்றில், அதற்குப் பிடித்தமானதைக் கொடுக்கும் போது, அது, அதன் மீதுள்ள ஆர்வத்தை இழந்து, கோபத்தோடும், சலிப்போடும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடும்.
எனக்கு அன்பான அந்த பூனையிடம், நான் கடுமையாக நடந்து கொள்வது ஒரு பாசாங்குத் தனம் தான். எனக்குள் இருக்கிற மேலும், மேலும் வேண்டும் என்கிற ஒரு திருப்தியற்ற பசி, என்னுடைய பூனையையும் தொற்றிக்கொண்டது. என்னுடைய திருப்தியற்ற பசியைக் குறித்து, நான் சிந்தித்துப் பார்க்கும் போது, “இப்பொழுது” என்பது எனக்குப் போதுமானதாக இல்லை.
திருப்தி என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாக வருவதில்லை, அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் (பிலி. 4:11). என்னென்ன காரியங்கள் நம்மை திருப்திபடுத்த முடியும் என்று நாம் நினைக்கிறோமோ, அவற்றை விடாப்பிடியாக அடைந்து விடுகிறோம், ஆனால் வேறொன்றைப் பார்த்ததும், நம்முடைய மனநிறைவு கலைந்துவிடுகிறது. இந்த திருப்தியற்ற நிலை, சில வேளைகளில் நம்மை பதட்டதிற்கு இழுத்துச் செல்கிறது. இதனால், அநேகரைக் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களிடமிருந்து நம்மை ஒதுக்கிக் கொள்கின்றோம்.
இன்னும் கூறுவோமேயானால், உண்மையான சந்தோஷத்தை அநுபவிப்பதற்குப் பதிலாக, எதைக்குறித்து பயப்பட்டோமோ, அதையே அநுபவிக்கின்றோம். வாழ்வில் மிக மோசமான விளைவுகளை அநுபவித்த பின்பு, பவுல் உண்மையான திருப்தியின் “இரகசியத்தை” வெளிப்படுத்துகின்றார் (வச. 11-12). முழுமையான திருப்தியைப் பெற நாம் எடுக்கும் முயற்சிகளையெல்லாம் தேவனிடம் ஒப்படைக்கும் போது, நம்மால் விளங்கிக் கொள்ளமுடியாத சமாதானத்தைப் பெற்றுக் கொள்கின்றோம் (வச. 6-7). கிறிஸ்துவின் ஆழமான வல்லமைக்குள்ளும், அழகிற்குள்ளும், கிருபைக்குள்ளும் இழுத்துக் கொள்ளப்படுவோம்.
எதிர்பாராத வேளைகளில் வியத்தகு சமாதானத்தை அநுபவித்ததுண்டா? எந்த விடாப்பிடியான ஏக்கம் அல்லது பயத்தை நீ தேவனிடம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது?
அப்பா, என்னுடைய சொந்த முயற்சியினால் மகிழ்ச்சியைப் பெற நினைத்ததை விட்டு விட்டு, உம்மோடு நேரம் செலவிடுவதை அணைத்துக் கொள்ள எனக்கு உதவியருளும்.