மிகப் பெரிய பணவீக்கத்தின் போது, சிறுவர்களாக இருந்த எனது பெற்றோர், கடினமான சூழல்களைச் சந்திக்க நேரிட்டதால், அவர்கள் வளர்ந்த பின்னரும் கடின உழைப்பாளிகளாகவும், தங்களுடைய பொருளால் பிறரையும் போஷிப்பவராகவும் இருந்தனர். அவர்கள் பேராசைப் பட்டதில்லை, அவர்களின் நேரத்தையும், திறமைகளையும், பொருளையும் ஆலயத்திற்கும், உதவி செய்யும் குழுக்களுக்கும் மற்றும் தேவையிலிருப்போருக்கும் கொடுத்தனர். உண்மையில், அவர்கள், தங்கள் பணத்தை ஞானத்தோடு கையாண்டு, உற்சாகமாகக் கொடுத்தனர்.
“ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும், அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்” (1 தீமோ. 6:9) என்ற பவுலின் எச்சரிக்கையை, இயேசுவின் விசுவாசிகளாகிய எனது பெற்றோர், தங்களது வாழ்வில் கையாண்டனர்.
அனைவரையும் ஈர்க்கத்தக்க செல்வங்களால் நிறை ந்த, எபேசு பட்டணத்தில் போதகராக இருந்த, இளம் தீமோத்தேயுவிற்கு பவுல் இந்த அறிவுரையை வழங்குகிறார்.
“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என பவுல் எச்சரிக்கிறார். மேலும், “சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” (வச. 10) என்கின்றார்.
அப்படியானால் இந்த பேராசைக்கு மாற்று மருந்து என்ன? “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிருங்கள்” என இயேசு கூறுகின்றார் (லூக்.12:13-21). எல்லாவற்றிற்கும் மேலாக நம் பரலோகத் தந்தையைத் தேடி, போற்றி, அவரை அன்பு செய்வோமேயாயின், அவரே நமக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தருபவராக இருப்பார். சங்கீதக்காரன் எழுதியுள்ளதைப் போன்று, “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும் (சங். 90:14) என்று நாமும் ஜெபிப்போம்.
ஒவ்வொரு நாளும் நாம் தேவனில் மகிழ்ந்து களிகூரும் போது, நம்முடைய பேராசைகளிலிருந்து விடுபட்டு, மன நிறைவைப் பெற்றுக் கொள்வோம். இயேசு நம்முடைய இருதயத்தின் ஆசைகளிலிருந்து நம்மை விடுவித்து, தேவனிடத்தில் ஐசுவரியவானாக இருக்கச் செய்வாராக!
பணத்தை எவ்வாறு கையாளுகின்றாய்? அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றாயா? இன்று உன்னுடைய பொருளாதார தேவைகளை தேவனிடம் கொடுத்துவிடலாமா?
தேவனே, இன்று காலை, உம்முடைய மாறாத அன்பினால் எங்களைத் திருப்தியாக்கும்.
எங்களது பேராசையை நீக்கி, உம்மீதுள்ள தாகத்தால் நிரப்பியருளும்.