அவள் அலைபேசியில் அழைத்தாள், குறுஞ்செய்தி அனுப்பினாள். இப்பொழுது கார்லா அவளுடைய சகோதரனின் வீட்டின் முன்புறமுள்ள வாயிலின் அருகில் நின்று கொண்டிருக்கின்றாள், அவனை எழுப்ப முடியவில்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, போதைக்கு அடிமையாகி, அதனை விட்டு வெளியே வரமுடியாமல் போராடிக் கொண்டிருக்கும் அவளுடைய சகோதரன், தன்னுடைய வீட்டிற்குள் தன்னை ஒளித்துக் கொண்டான். அவனுடைய தனிமைக்குள் எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற விடாப்பிடியான முயற்சியில், கார்லா அவனுக்குப் பிடித்தமான அ நேக தின்பண்டங்களோடும், சில உற்சாகப்படுத்தும் வேத வார்த்தைகளோடுமுள்ள தனது பையை வெளிகேட்டின் வழியாக உள்ளே இறக்கினாள்.
அவளுடைய கரத்தை விட்டு நழுவிய அந்தப் பை, கேட்டிலுள்ள ஒரு கொக்கியில் மாட்டி, கிழிந்து, அதிலுள்ள அனைத்தும் கீழே மணலில் கொட்டியது. அவள் நல்லெண்ணத்தோடும், அன்போடும் வாங்கி வந்த அனைத்தும் கொட்டப்பட்டு, வீணானது போலாகிவிட்டது. அவளுடைய சகோதரன், அவள் வாங்கி வந்த நற்கொடைகளை கவனிப்பானா? அவள் எதிர் பார்த்த நம்பிக்கையினை, அவளால் கொடுக்க முடியுமா? அவளால் நம்பிக்கையோடு ஜெபிக்கவும் அவன் விடுதலை பெறும் மட்டும் காத்திருக்கவும் தான் முடிந்தது.
சோர்வினாலும், தனிமையினாலும் தவித்துக்கொண்டிருந்த இவ்வுலகினை தேவன் நேசித்தப் படியால், அவருடைய ஒரே நேசக் குமாரனை, அன்பு, சுகம் ஆகிய நற்கொடைகளோடு, பாவம் நிறைந்த கோட்டைக்குள் இறக்கினார் (யோவா. 3:16). இந்த அன்புச் செயலின் கிரயத்தைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி, ஏசாயா 53:5ல் குறிப்பிடுகின்றார். இந்த நேசக் குமாரன் “நம்முடைய மீறுதல்களின் நிமித்தம்…. காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம்…… நொறுக்கப்பட்டார்” அவருடைய காயங்கள், நாம் முழுமையான சுகத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நம்பிக்கையைத் தருகின்றது. “நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும்” அவர் தன்மேல் விழப்பண்ணினார் (வச. 6).
நம்முடைய பாவத்திற்காகவும், தேவைகளுக்காகவும் குத்தப்பட்டவராய், தேவனுடைய ஈவாகிய இயேசு நம்முடைய வாழ்வினுள் இன்று புதிய பெலத்தோடும், புதிய எண்ணத்தோடும் வருகின்றார். அவருடைய ஈவு உனக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?
உனக்காக குத்தப்பட்ட தேவனுடைய அன்பினை நீ உணர்ந்துள்ளாயா? அவருடைய வியத்தகு கிருபையால் உடைந்த போன வாழ்வு மாற்றப் படுவதை கண்டுள்ளாயா?
அன்புள்ள தேவனே, என்னுடைய இருதயத்தைச் சுற்றியுள்ள வேலியின் வழியே, என்னுடைய தேவைகளைச் சந்திப்பதற்காக இயேசுவை ஈவாக அனுப்பியதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.