சிங்கப்பூரின், ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தைக்குறித்து, பொதுமக்களிடையே கருத்து பரிமாற்றங்கள் ஏற்பட்ட போது, அது, வெவ்வேறு கருத்துடைய விசுவாசிகளையும் பிரித்தது. சிலர் மற்றவர்களைக்குறித்து “குறுகிய மனமுடையவர்கள்” என்றனர், தங்கள் விசுவாசத்தை விட்டுக் கொடுக்கின்றனர் என்றனர்.
சர்ச்சைகள், தேவனுடைய குடும்பங்களில் பிரிவினைகளையும், மனக்காயங்களையும், மக்களிடையே மனச்சோர்வையும் கொண்டுவரும். நான், என்னுடைய சொந்த தீர்ப்புகளைக் கொடுப்பதற்கு முன்பு, வேதாகமப் போதனைகளை என்னுடைய வாழ்வில் பயன்படுத்தும்படி உணர்ந்தேன். நான் ஏற்றுக்கொள்ளாதவர்களைக் குறித்து அதிகமாக விமர்சனம் செய்த தவற்றை உணர்ந்தேன்.
நாம் ஏற்றுக்கொள்ளாத கருத்துக்கள் எவை அல்லது அவற்றை நாம் எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பது பிரச்சனையல்ல, நாம் அவற்றை வெளிப்படுத்தும் போது நம்முடைய இருதயம் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் பிரச்சனை. நாம் கருத்துக்களை மட்டும்தான் ஏற்றுக் கொள்ளவில்லையா அல்லது அக்கருத்துக்குப் பின்னால் இருக்கும் மக்களையும் கிழித்தெறிய நினைக்கிறோமா?
சில வேளைகளில் தவறான போதனைகளுக்கு எதிர்த்து பேசவேண்டிய நேரம் வரும். நம்முடைய உறுதியான கருத்துகளைக் குறித்து விளக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். எபேசியர் 4:2-6 வரையுள்ள வசனங்கள் நம்மை மிகுந்த மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும், நீடிய பொறுமையோடும், அன்போடும் ஒருவரையோருவர் தாங்கி, “ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ளுவதற்கு” ஜாக்கிரதையாய் இருக்கும்படியும் வலியுறுத்துகிறது (வச. 3).
சில சர்ச்சைக்குரிய கருத்துகள் தீர்க்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய இலக்கு மக்களின் விசுவாசத்தைக் கட்டுவதேயொழிய, அவற்றைக் கிழித்தெறிவதல்ல (வ.29). நம்முடைய விவாதத்தில் மற்றவர்களை கீழேத்தள்ளி, நாம் வெற்றிபெற நினைக்கிறோமா? அல்லது நாம் தேவனுடைய உண்மையை, அவருடைய நேரத்தில், அவருடைய வழியில், புரிந்துகொள்ள தேவன் உதவும் மட்டும் காத்திருக்கப் போகிறோமா? ஒரே கர்த்தரையும், ஒரே விசுவாசத்தையும் தான் பகிர்ந்து கொள்கிறோம் (வச. 4-6) என்பதை மறவாதிருப்போம்.
உணர்வு சார்ந்த காரியங்களில், நீ உன்னுடைய விசுவாசத்தை மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும், அன்போடும் எப்படி விளக்குவாய்? அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்காக எப்படி ஜெபிக்கிறாய்?
தேவனே, நான் உண்மையை எடுத்துக் கூறுவதற்கு எனக்கு வழிகாட்டும், நான் அன்போடு அதை எடுத்துக் கூறி, அவர்களோடு நல் உறவை ஏற்படுத்திக்கொள்ள எனக்கு உதவியருளும்.