அந்த இளம் தந்தை, பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டார். “ஐஸ் கிரீம்! ஐஸ் கிரீம்!” என்று கத்திக்கொண்டிருந்தான், அவருடைய சிறிய மகன். அந்த அங்காடியின் கூட்டத்திற்கு மத்தியில், அங்கு பொருட்கள் வாங்க வந்திருந்த அனைவரின் கவனமும் எங்கள் பக்கம் திரும்பியது. “நல்லது, ஆனால் முதலில் அம்மாவிற்கு தேவையானவற்றை முடித்துக்கொள்வோம், சரிதானே?” என்றார் அந்த தகப்பன். “இல்ல்ல்லை! ஐஸ் கிரீம்!” என்றான் சிறுவன். அப்பொழுது, நன்கு உடை அணிந்து, தன்னுடைய காலணிகளின் நிறத்திலேயே கைப்பையையும் வைத்திருந்த ஒரு பெண், அவ்விடத்துக்கு வந்தாள். “அவன் பிடிவாதமாக இருக்கிறான்” என்றார் தந்தை. அவள் சிரித்துக்கொண்டே, “உங்களுடைய சிறுபையனுக்கு பொருத்தமில்லாதது நடந்து கொண்டிருக்கிறது. அவன் ஒரு சிறு பையன் என்பதை மறந்து விடாதிருங்கள், நீங்கள் பொறுமையோடு அவனருகில் இருப்பதையே அவன் எதிர்பார்க்கிறான்” என்றாள். அந்த சூழ்நிலை எவ்விதத்திலும் அப்பொழுது மாறிவிடவில்லையெனினும், தந்தையும் மகனும் ஒன்றாயிருக்கும் ஒரு சந்தர்ப்பமே அந்நேரத்தில் தேவையாயிருந்தது.
அந்த புத்திசாலியான பெண் கூறிய வார்த்தைகளை சங்கீதம் 103 ல் காண்கின்றோம். தாவீது நம்முடைய தேவனைக் குறித்து, “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்… அவர் என்றைக்கும் கோபம் கொண்டிரார்” (வச. 8-9). அதனைத் தொடர்ந்து இவ்வுலகத் தந்தையின் தன்மையைக் காட்டுகின்றார், “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” (வச. 13). “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” (வச. 14). நாம் மிகவும் சிறியவர்கள், உடையக்கூடியவர்கள் என்பதை அவர் அறிவார்.
இந்த உலகம் நம்மைக் கையாளுகின்ற விதத்தால், நாம் மேற்கொள்ளப்பட்டு, உடைந்து போகிறோம். ஆனால் நம் தேவன் அளவற்ற அன்போடும், பொறுமையோடும் எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் என்ற ஆச்சரியமான உறுதியைத் தருகிறார்.
ஒரு குழந்தையைப் போல எப்பொழுதாகிலும் உன்னுடைய உணர்வுகளால் மேற்கொள்ளப்பட்டாயா? அப்படிப்பட்ட வேளைகளில் தேவனாகிய பிதா உனக்கு உதவுகிறார் என்பதை நம்புகிறாயா?
நாங்கள் யாரென்பதை அறிந்து, பொறுமையோடும், எப்பொழுதும் எங்களோடிருக்கிற பிதாவே உமக்கு நன்றிகூறுகிறேன்.