1967 ல், அமெரிக்க பாடகரான, டோட்டி ராம்போ எழுதிய “அவர், நான் செய்யும் தவறுகளையெல்லாம் தாண்டி, என்னுடைய தேவைகளைப் பார்க்கிறார்” (He Looked Beyond My Fault and Saw My Need) என்ற பாடலை நான் சிறுவனாக இருந்த போது கேட்டிருக்கின்றேன். ஆனால், அப்பொழுது, நான் அந்தப் பாடலின் ஆழ்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பின்னர் தான் உண்மையைத் தெரிந்து கொண்டேன். டோட்டியின் சகோதரன் எடி, அநேகத் தவறுகளைச் செய்தபடியால், தன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள் என அவன் கருதினான், ஆனால் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவனுக்குண்டு. தேவன் அவனுடைய பெலவீனங்களை அறிவார், ஆனாலும் அவனை நேசிக்கிறார் என்பதை டோட்டி, இப்பாடலின் மூலம், அவனிடம் உறுதியாகக் கூறினாள்.
இஸ்ரவேலரும், யூதா ஜனங்களும் பெலவீனத்தை உணர்ந்த அநேக நேரங்களில் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவர்களுக்குக் காட்டப்பட்டதைக் காண்கின்றோம். தேவன், ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகளை, நிலையற்ற அந்த ஜனங்களிடம் அனுப்பி, செய்திகளைக் கொடுக்கின்றார். ஏசாயா 35 ல், தீர்க்கதரிசி, தேவன் அவர்களை மீட்டுக்கொள்வார் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார். அவர்கள் நம்பிக்கையைத் தழுவிக்கொள்ளும் பொழுது, உற்சாகத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்கின்றார். “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” (வ.3) என்கின்றார். உற்சாகத்தைப் பெற்றுக்கொண்ட தேவனுடைய ஜனங்கள், மற்றவர்களையும் திடப்படுத்தும்படி அழைக்கின்றார், இதைத் தான் ஏசாயா, வசனம் 4 ல், ”மனம் பதறுகிறவர்களைப் பார்த்து, நீங்கள் பயப்படாதிருங்கள்; திடன் கொள்ளுங்கள்” என்று தைரியப்படுத்துங்கள்” என்று கூறுகிறார்.
நீயும் பெலவீனமாக இருக்கிறாயா? உன்னுடைய பரலோகத்தந்தையிடம் பேசு. அவர் பெலவீனரைத் தமது வேத வார்த்தையாலும், தமது வல்லமையுள்ள பிரசன்னத்தாலும் பெலப்படுத்துகின்றார். அப்படியானால் நீயும் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும்.
சமீபத்தில் என்னென்ன வழிகளில் உற்சாகத்தைப் பெற்றுக்கொண்டாய்? கஷ்டத்தில் இருக்கும் யாரை இன்று நீ உற்சாகப்படுத்தப் போகின்றாய்?
அப்பா, உம்முடைய பெலனையும், கிருபையையும் இன்று எனக்குத் தாரும்.