ஐந்து வயதான எலியா இயேசு பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்தார் என்று போதகர் கூறியதை கவனித்துக் கொண்டிருந்தான். பின்னர் அவர் ஜெபிக்கும் போது, நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார் எனக் கூறி, நன்றி செலுத்திய போது, அவன், திணறியவனாய், “ஓ, இல்லை! அவர் மரித்துவிட்டாரா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.
இவ்வுலகில், இயேசு கிறிஸ்து தன் வாழ்வைத் துவங்கிய நாளிலிருந்து, அநேகர் அவர் மரிக்க வேண்டுமென விரும்பினர். ஏரோது அரசனின் ஆட்சி காலத்தில், ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம்” என்றார்கள். (மத்.2:2) அரசன் இதைக் கேட்ட போது, ஒரு நாள், தன்னுடைய அரசாட்சியை இயேசுவிடம் இழக்க நேரிடும் என்று பயந்தான். எனவே அவன், தன் படை வீரர்களை அனுப்பி, பெத்லகேமின் சுற்றுப் புறங்களிலுள்ள அனைத்து இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளையும் கொன்று போட்டான். ஆனால் தேவன், அவருடைய மகனைப் பாதுகாக்க, ஒரு தூதனை அனுப்பி, அவருடைய பெற்றோரை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தார். அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி, குழந்தையைக் காப்பாற்றினார்கள். (வ.13-18)
இயேசு, தன்னுடைய ஊழியக் காலத்தை நிறைவு செய்த போது, உலக மக்களின் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்டார். அவரைக் கேலி செய்யும் படியாக, பிலாத்து அவருடைய சிலுவைக்கு மேலாக, “இவர் இயேசு, யூதருக்கு ராஜா” என்று எழுதி வைத்தான் (27:37). ஆனால் மூன்று நாளைக்குப் பின், அவர் வெற்றியாக, கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர், பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, சிங்காசனத்தில் ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக உட்கார்ந்தார். (பிலி. 2:8-11)
இந்த ராஜா, நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்- உன்னுடைய ,என்னுடைய, மற்றும் எலியாவின் பாவங்களுக்காக மரித்தார். நம்முடைய இருதயங்களை அவர் ஆட்சி செய்யும் படி, அவரிடம் கொடுப்போம்.
இயேசு கிறிஸ்துவை உன்னுடைய ராஜாவாக ஏற்றுக் கொள்வது என்பது உனக்கு எப்படித் தோன்றுகிறது? உன் வாழ்வில் ஏதாவது சில பகுதிகளை அவருக்கு கொடுக்காமல் வைத்திருக்கின்றாயா?
இயேசுவே, எங்களுடைய பாவங்களுக்காக, நீர் மனப்பூர்வமாக மரித்து, எங்களுக்கு மன்னிப்பை வழங்கியமைக்காக, உமக்கு நன்றி கூறுகின்றேன். எங்களை முழுமையாக உம்முடைய ஆளுகைக்கு ஒப்படைக்க, எங்களுக்குக் கற்றுத் தாரும்.