இத்தாலி தேசத்தில், பைசா என்ற இடத்திலுள்ள, மிகவும் பிரசித்திப் பெற்ற சாய்ந்த கோபுரத்தைப் பற்றி கேள்விப் பட்டிருப்பாய், ஆனால் சான் பிரான்ஸிஸ்கோ பட்டணத்திலுள்ள சாய்ந்த கோபுரத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றாயா? அது, மில்லேனியம் கோபுரம் என்றழைக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஐம்பத்திஎட்டு தளங்களைக் கொண்ட, வானளாவிய இக்கட்டிடம், பெருமையோடு நிற்கின்றது, ஆனால் சற்று வளைந்து, சான் பிரான்ஸிஸ்கோ நகரின் மையப்பகுதியில் உள்ளது.
அதன் பிரச்சனை என்ன? அதனை வடிவமைத்த பொறியாளர்கள் தேவையான ஆழத்திற்கு அஸ்திபாரம் தோண்டவில்லை. எனவே, இப்பொழுது அதன் அஸ்திபாரத்தில் இன்னும் சில வேலை செய்யும்படி, அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்காகும் செலவுத் தொகை, கட்டிடத்தைக் கட்டும் போது ஆன செலவையும் விட அதிகமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு பூமியதிர்ச்சி வந்தால், இக்கட்டிடம் தகர்ந்து போகாமல் காக்கப்பட, அதைச் சரிசெய்வது அவசியமென கருதுகின்றனர்.
இங்குள்ள, வேதனை தரும் பாடம் என்ன? அஸ்திபாரம் மிக முக்கியமானது ! உன்னுடைய அஸ்திபாரம் உறுதியாக இல்லையென்றால், பேராபத்து ஏற்படலாம். மலைப் பிரசங்கத்தின் முடிவில், இயேசுவும் இதைக் கற்பிக்கின்றார். மத்தேயு 7:24-27 ல், அவர் இரண்டு கட்டுமானர்களைப் பற்றி குறிப்பிடுகின்றார். ஒருவன் கற்பாறையின் மீது கட்டுகிறான், மற்றவன் மணலின் மீது கட்டுகின்றான். தவிர்க்கமுடியாத ஒரு புயலின் போது, கற்பாறையின் மீது கட்டப்பட்ட வீடு மட்டும் உறுதியாக நின்றது.
இது நமக்கு கற்றுத் தருவது என்ன? நம்முடைய வாழ்வு, கீழ்ப்படிதல் மற்றும் தேவன் மீதுள்ள நம்பிக்கையின் மேல் கட்டப்பட வேண்டுமென இயேசு திட்டவட்டமாகச் சொல்கின்றார் (வ.24). நாம் அவரைச் சார்ந்திருந்தால், அவருடைய வல்லமையும், அளவற்ற கிருபையும், நம் வாழ்வின் உறுதியான அஸ்திபாரமாக இருக்கும்.
நம் வாழ்வில் நாம் ஒருபோதும் புயலைச் சந்திப்பதில்லை என தேவன் நமக்கு வாக்களிக்க வில்லை, மாறாக, கற்பாறையான அவர் மீது நம் வாழ்வு கட்டப்படும் போது, எந்த புயல் வீசினாலும், அவர் மீதுள்ள விசுவாசமாகிய அஸ்திபாரம் அசைக்கப்படுவதில்லை.
உன் வாழ்வில் மிக மோசமான புயல் வீசிய போது, அதை எதிர் நோக்க, உன் விசுவாசம் உனக்கு எப்படி உதவியாயிருந்தது? ஒவ்வொரு நாளும் உன் விசுவாசத்தை பெலப்படுத்த, என்னென்ன வழிகளைக் கையாளுகின்றாய்?
அப்பா, என் வாழ்வின் புயல்களை என்னால் தவிர்க்க முடியாது, அனுதினம் வேத வார்த்தையின் படி வாழ்ந்து, உம்மில் உள்ள என் அஸ்திபரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள எனக்கு உதவியருளும்.