1975 ஆம் ஆண்டு, திரைக் கதை வசனம் எழுதும் ரோட் செர்லிங்க் என்பவர், “இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மக்கள் என்னை நினைவில் வைத்திருக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்றார். த ட்விலைட் சோன், (The Twilight Zone) என்ற அமெரிக்க டெலிவிஷன் தொடர் கதையை உருவாக்கிய செர்லிங்க், தன்னைக் குறித்து மக்கள், “அவர் ஒரு எழுத்தாளர்,” என நினைவுகூற வேண்டும் என்று விரும்பினார். செர்லிங்கைப் போன்று, நம்மில் அநேகர் விரும்புவதுண்டு, நம்முடைய வாழ்வும், அர்த்தமுள்ளதாகவும், நிரந்தரமாக ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்வதாகவும் இருக்க வேண்டுமென நினைக்கலாம்.

விரைவாகக் கடந்து செல்லும் இந்த வாழ்வில், ஓர் அர்த்தத்தோடு போராடிக் கொண்டிருந்த ஒரு மனிதனான யோபுவைக் குறித்து வேதாகமத்தில் காண்கிறோம். ஒரே கணத்தில், அவனுடைய உடமைகளையும், அவனுக்கு மிக அருமையான பிள்ளைகளையும் இழந்தான்.  அவனுடைய இந்த இழப்புக்கான காரணம், அவனுடைய பாவச்செயல் தான் என அவனுடைய நண்பர்களும் அவனைக் குற்றப்படுத்தினர். யோபு கதறுகின்றான், “ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்,” (யோபு 19:23-24) என்றான்.

யோபுவின் வார்த்தைகள் “பாறையில் நிரந்தரமாகப் பதிக்கப்பட்டுவிட்டன,” நாம் இவற்றை இப்பொழுது வேதாகமத்தில் காண்கின்றோம், யோபு, தான் விட்டுச் செல்லும் பாரம்பரியத்தைக் காட்டிலும், அதிக அர்த்தம் அவன் வாழ்க்கைக்குத் தேவையாயிருந்தது. அவற்றை அவன் தேவனுடைய பண்புகளில் கண்டுகொண்டான். யோபு வெளிப்படுத்துகின்றான், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார், அவர், கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார்,” (19:25) இந்த அறிவு அவனுக்குள் சரியான வாஞ்சையைக் கொடுத்தது. “அவரை நானே பார்ப்பேன்,” “இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது,” என்கின்றான். (வ.27)

முடிவில், யோபு தான் எதிர்பார்த்ததை கண்டுபிடிக்கவில்லை. அதையும் விட மேலானதைக் கண்டு பிடித்தான். அர்த்தமுள்ள யாவற்றிற்கும், நிலையான யாவற்றிற்கும் காரணமானவரைக் கண்டுபிடித்தான். (42:1-6)