அடர்ந்த, வெப்பமான காட்டினுள் போர் செய்துகொண்டிருந்த போர் வீரர்கள், தங்களை வெறுப்படையச் செய்யும் ஒரு பிரச்சனையை சந்தித்தனர். குத்தக்கூடிய முட்களைக் கொண்ட ஒரு வகை படர்கொடி, திடீரென, எதிர் பாராத விதமாக போர் வீரர்களின் உடலைச் சுற்றிக் கொண்டு, அவர்களை நகர விடாமல் செய்துவிடும். அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள போராடும் போது, மேலும் மேலும் கொடிகள் சுற்றிக்கொள்ளும். போர் வீரர்கள் இந்த கொடிக்கு “ஒரு நிமிடம் காத்திரு” என்று பெயரிட்டனர், ஏனெனில், இந்த கொடிகளால் சுற்றப்பட்டு, நகரமுடியாமல் தவிக்கும் போர் வீரர்கள் மற்ற வீரர்களை, “எனக்காக ஒரு நிமிடம் காத்திருக்கவும், நான் கட்டப்பட்டுள்ளேன்” என்று கூப்பிடுவார்கள்.
இதே போன்று, பாவ வலையில் வீழ்ந்த, இயேசுவின் விசுவாசிகளாலும் முன்னேறிச் செல்ல முடியாமல் போய் விடும். எபிரெயர் 12:1, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விட்டு,… பொறுமையோடே ஓடக்கடவோம்.”என்று நம்மை எச்சரிக்கின்றது. ஆனால், நம்மைத் தடுக்கிற பாவத்தை எப்படி தூக்கி எறிவது?
நம் வாழ்வை ஆண்டு கொண்டுள்ள பாவத்திலிருந்து விடுதலை பெற, ஒரே வழி இயேசுவே. நம்மை இரட்சிக்க வல்லவராகிய அவரையே நம் கண்கள் நோக்கக் கடவது (12:3). அவர் தேவக்குமாரனாயிருந்தும், முழுவதும் மனிதனாக வந்தபடியாலே, “அவர் தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார், எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதிருக்கிற பிரதான ஆசாரியர் அவர். (2:17-18; 4:15) பாவத்தினாலே கட்டுண்டவர்களாய் நாம் காணப்படலாம், நாம் சோதனைகளை மேற்கொள்ளும் படி தேவன் விரும்புகிறார். நம்முடைய சுய பெலத்தினால் அல்ல, அவருடைய பெலத்தோடே ,நம்மைச் சுற்றி வளைக்கின்ற எந்த பாவத்தையும் உதறித் தள்ளி விட்டு, அவருடைய நீதியின் வழியில் பொறுமையோடு ஓடக்கடவோம். (1 கொரி. 10:13).
எந்த பாவம் அல்லது பாவங்கள் உன்னை ஆண்டு கொண்டுள்ளன? இவற்றிலிருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கின்ற நீ என்ன செய்ய வேண்டும்?
இயேசுவே, என்னுடைய பாவ வாழ்விலிருந்து விடுதலை பெற, உம்முடைய பெலனைத்தாரும். என்னுடைய பெலத்தையல்ல, உம்முடைய வல்லமையையே நம்பி வாழ எனக்கு உதவியருளும். என்னை சரியான பாதையிலே வழிநடத்தும்.