அப்பா, எங்கே இருக்கின்றீர்கள்?
நான் எங்கள் வீட்டுக்கருகிலுள்ள நடைபாதையில் வந்து கொண்டிருந்த போது, என்னுடைய மகள், கலக்கமுற்றவளாய் என்னை அலைபேசியில் கூப்பிட்டாள். நான், அவளை விளையாட்டு பயிற்சிக்கு அழைத்துச் செல்ல, சரியாக 6:00 மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும். நான் சரியான நேரத்திற்குத்தான் போய்க் கொண்டு இருக்கிறேன் ஆனால் என்னுடைய மகளின் குரல், அவளுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. நான் உடனே, “இதோ வந்து விட்டேன், நீ ஏன் என்னை நம்பவில்லை?” என்று கேட்டேன்.
நான் இந்த வார்த்தைகளைப் பேசிய போது, “ என்னுடைய பரலோகத் தந்தை, இதே கேள்வியை எத்தனை முறை என்னிடம் கேட்டிருப்பார்?” என எனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டேன். மன அழுத்தம் மிகுந்த வேளைகளில் நானும் பொறுமையை இழந்திருக்கின்றேன். நானும் விசுவாசத்தோடிருக்க, தேவன் அவருடைய வாக்குதத்தத்தை நிறைவேற்றுவார் என்று நம்புவதற்குப் போராடியுள்ளேன். அப்பொழுது நான் “அப்பா, எங்கே இருக்கின்றீர்கள்? “ என்று கதறியுள்ளேன்.
கவலையோடு, நம்பிக்கையிழந்த வேளைகளில், தேவனுடைய பிரசன்னத்தையும், அவருடைய நன்மையையும், அவர் எனக்கு வைத்துள்ள நோக்கத்தையும் சந்தேகித்துள்ளேன். இஸ்ரவேலரும் அப்படியே சந்தேகப்பட்டனர். உபாகமம் 31 ஆம் அதிகாரத்தில், இஸ்ரவேலர் வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள ஆயத்தமாகின்றனர், அவர்களுடைய தலைவன் மோசே, அவர்களோடு வரப்போவதில்லை என்பதையும் அறிவர், இப்பொழுது, மோசே அவர்களை தைரியப்படுத்துகின்றார். தேவன் தந்துள்ள வார்த்தையை நினைவு படுத்துகின்றார், “கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” (வ.8)
தேவன் நம்மோடு, எப்போதும் இருக்கிறார் என்ற வாக்குதத்தம், நம்முடைய விசுவாசத்தின் மூலைக்கல்லாயிருக்கிறது. (மத். 1:23; எபி. 13:5) வெளிப்படுத்தல் 21:3, இதனையே வலியுறுத்துகின்றது. “இதோ மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது , அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்”
தேவன் எங்கே இருக்கிறார்? அவர் இங்கே இருக்கிறார், இப்பொழுது இருக்கிறார், நம்மோடு இருக்கிறார், நம்முடைய ஜெபத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார்.
தேவனுடைய சமுகத்தைக் குறித்த உண்மையை, வேதாகமத்தின் எப்பகுதி உனக்கு காட்டுகின்றது? இந்த உண்மை உன் மனதை விட்டு நீங்காதிருக்கும் படி, இந்த வேதாகமப் பகுதியை எழுதி, நீ பார்க்கக் கூடிய இடத்தில் வைத்துக்கொள்
அப்பா பிதாவே, நீர் எப்பொழுதும் எங்களோடு இருக்கின்றீர், எப்பொழுதும் பதில் கொடுக்கிறவராய் இருக்கின்றீர் என்பதை மனதில் கொள்ள எங்களுக்கு உதவியருளும்.