அயர்லாந்து தேசத்தில், டப்ளின் என்ற இடத்திலுள்ள தூய பேட்ரிக் பேராலயத்தில் ஒரு கதவு உள்ளது. ஐந்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு கதையை, அது நமக்கு தெரிவிக்கின்றது. 1492ஆம் ஆண்டு, பட்லர் மற்றும் பிட்ஸ்ஜெரால்ட் ஆகிய இரு குடும்பத்தினரும், அவ்விடத்திலுள்ள ஓர் உயர் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அச்சண்டையின் உச்சக்கட்டத்தில், பட்லர் குடும்பத்தினர் பேராலயத்தினுள் அடைக்கலம் புகுந்தனர். சண்டையை விட்டு விட்டு, சமாதானமாகிவிடும் படி கேட்டு, பிட்ஸ்ஜெரால்ட் குடும்பத்தினர் அங்கு வந்தனர். ஆனால் பட்லர்கள் கதவைத் திறக்க அஞ்சினர். பிட்ஸ்ஜெரால்டினர், கதவில் ஒரு துளையிட்டு, அதன் வழியே தம் கரத்தை உள்ளே நீட்டி, சமாதானத்தைக் கேட்டார். எனவே இரு குடும்பத்தினரும் ஒப்புரவாகினர், எதிரிகள் இருவரும் நண்பர்களானார்கள்.
கொரிந்து சபையினருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதத்தில் ஒப்புரவாகுதலின் கதவைக் குறித்து எழுதுகின்றார். தேவன் தம்முடைய சொந்த முயற்சியினாலும், அளவற்ற அன்பினாலும் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், பிதாவுக்கும் மனிதனுக்கும் உள்ள உடைந்து போன உறவை, மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி செய்தார். நாம் தேவனை விட்டு மிகவும் தூரமாய் போய் விட்டோம், ஆனால், அவருடைய இரக்கம் நம்மை அங்கேயே விட்டு விடவில்லை. நாம் மீண்டும் அவரோடு ஒப்புரவாகும்படி செய்தார். “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல்” (2 கொரி. 5:19) தேவனுடைய நீதியை நிறைவேற்ற “பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் ” எனவே இயேசுகிறிஸ்துவைக் கொண்டு நம்மை தேவனோடு ஒப்புரவாக்கினார்”
(வச. 18, 21).
ஒருமுறை தேவனுடைய சமாதானத்தைப் பெற்றுக்கொண்ட நாம், இந்தச் செய்தியை மற்றவர்களுக்கும் கொடுக்கவேண்டிய முக்கிய பொறுப்பினை பெற்றுள்ளோம். அவரை விசுவாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அன்பின் தேவன் தரும் மன்னிப்பிற்கும், மீட்பிற்கும் நாம் சாட்சிகளாய் இருக்கின்றோம்.
தேவன் தரும் ஒப்புரவாகுதலை நீ எவ்வாறு பெற்றுள்ளாய்? தேவன் தரும் இச்செய்தியை, தேவையுள்ளவர்களுக்கு, இன்று நீ எப்படி எடுத்துச் சொல்வாய்?
தேவனே, உம்மை விட்டு பிரிந்து, நம்பிக்கை இழந்து போன எங்களை விட்டு விடாமல், உமது நேசக் குமாரனாகிய இயேசுவை எங்களுக்காகத் தந்து, நாங்கள் மீண்டும் உம்மண்டை வர எங்களுக்கு வழியை தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.