நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நம்தேசசத்தில் ஒரு மனிதன் கடினமாக உழைத்து, வறண்டு, வெடித்துக் கிடந்த, பயனற்ற ஒரு நிலத்தை செழிப்பான இடமாக மாற்றினார். நதியால் சூழப்பட்ட அந்த இடம், நில அரிப்பாலும், சுற்றுச்சூழலின் பாதிப்பாலும், அழிக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்ட அம்மனிதன், அதனை நேசித்து, அதில் மரங்களை நட ஆரம்பித்தான். ஒரு முறை மூங்கில், அடுத்து பருத்தி என மாற்றி மாற்றி பயிரிட்டான். இப்பொழுது, அடர்ந்த காடும், நிறைய காட்டு உயிரினங்களும் 1,300 ஏக்கர் நிலத்தை நிரப்பியுள்ளன. அந்த நிலத்திற்கு கிடைத்த இந்த மறுவாழ்வு தன்னால் நடந்ததல்ல என்று அம்மனிதன் வலியுறுத்திக் கூறுகின்றான். அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இவ்வுலகில், எத்தனை அற்புதமாக விதைகள் காற்றில் சுமந்து செல்லப்பட்டு, விளை நிலங்களில் விதைக்கப்படுகின்றன, பறவைகளும், விலங்குகளும் விதைத்தலில் பங்கு பெறுகின்றன, மரங்களும், செடிகளும் செழித்து வளர நதிகள் தங்கள் உதவியைச் செய்கின்றன என்று அம்மனிதன் வியந்து கூறுகின்றான்.

படைப்பு நடைபெறும் விதத்தை நம்மால் கிரகிக்கவும், கட்டுப் படுத்தவும் முடியாது. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்த காரியங்களும் இதே போன்றது என்று இயேசு கூறுகின்றார். “தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து, இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாத விதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார். (மாற். 4:26-27) இவ்வுலகிற்கு வாழ்வையும், சுகத்தையும் தேவன் ஈவாகக் கொடுத்துள்ளார், இது நம்முடைய கரத்தின் திறமையினால் கிடைப்பதல்ல. தேவன் நம்மிடம் எதை சொல்கின்றாரோ அதை நாம் செய்யும் போது நம்முடைய வாழ்வு துளிர்க்கும். அவருடைய கிருபையினாலேயே எல்லாம் கிடைக்கின்றன.

ஒருவருடைய இருதயத்தை மாற்றியது நான் தான் என நினைக்கும்படி நமக்குத் தோன்றலாம், அல்லது நம்முடைய உண்மையான முயற்சியால் அது நடைபெற்றது என்று எண்ணலாம், நம்மை பலமுறை சோர்வடையச் செய்யும் அத்தகைய எண்ணம் தேவையில்லை. எல்லாவற்றையும் விளையச் செய்கிறவர் அவரே. எல்லாம் அவருடைய கிருபை.