இயேசுவைப் பற்றிய சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு இன்னும் அதிக ஜனங்களைத் தேவன் அனுப்பும்படி சாமுவேல் மில்ஸ் என்பவரும், அவருடைய நான்கு நண்பர்களும் அடிக்கடி கூடி ஜெபித்து வந்தனர். 1806ஆம் ஆண்டு, ஒரு நாள், அவர்கள் தங்கள் ஜெபத்தை முடித்து விட்டுத் திரும்பியபோது, ஒரு பெரிய புயல் காற்றில் அகப்பட்டனர். எனவே அவர்கள் ஒரு வைக்கோல் போர் அண்டை அடைக்கலமாயினர். அதிலிருந்து அவர்களுடைய வாராந்திர ஜெபக்கூடுகை “வைக்கோல் போர் ஜெபக்கூடுகை” என்றழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் உலகளவில் செயல்படும் ஓர் இயக்கமானது. இன்றும் இந்த வைக்கோல் போர் ஜெபக்குழுவின் நினைவுச் சின்னம் அமெரிக்காவில் வில்லியம்ஸ் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நம் ஜெபத்தின் மூலம், தேவன் செயல்படக் கூடியதை அது நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. 

அவருடைய பிள்ளைகள் ஒரு பொதுவான நோக்கத்தோடு தன்னிடம் வரும்போது, நம்முடைய பரலோகத் தந்தை வெகுவாக மகிழ்ச்சியடைகின்றார். அது, ஒரு குறிப்பிட்ட பாரத்தை குடும்ப நபர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டு, ஒரு மனதோடு குடும்ப ஜெபத்தில் வருவது போலவுள்ளது.

அதிகமான துன்பங்களைச் சந்தித்த காலத்தில், மற்றவர்களின் ஜெபத்தின் மூலம் தேவன் தனக்கு எப்படி உதவினார் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகின்றார். “அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார். அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும் பொருட்டு நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவி செய்யுங்கள்” (2 கொரி. 1:10-11) தேவன் நம்முடைய ஜெபங்களை, சிறப்பாக நம்முடைய குழு ஜெபங்களை , இவ்வுலகில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றப் பயன் படுத்துகின்றார். 

நாம் அநேகராகக் கூடி ஜெபிக்கும் போது, தேவன் தரும் நன்மைகளுக்காக நாம் சேர்ந்து மகிழ்வோம். நம்முடைய அன்புத் தந்தை, நாம் அவரிடம் வரும்படி காத்திருக்கின்றார், ஏனெனில் நாம் நினையாத வழிகளில், நம்மூலம் அவர் கிரியை செய்ய முடியும்.