இரண்டாம் உலகப்போரின் போது, நாசி படைகளுக்குத் தப்பி வந்த யூத அகதிகளை ஒளித்து வைத்துக்கொள்ள, பிரான்ஸ் தேசத்தின் கிராமத்தினர் பெரிதும் உதவினர். அவர்களுடைய ஊரைச் சுற்றியுள்ள காடுகளில், சிலர் பாடல்களைப் பாடினர். அது, அகதிகள் தங்கள் மறைந்திருக்கும் இடங்களிலிருந்து வெளிவர பாதுகாப்பானது என்பதை அவர்களுக்குத் தெரிவித்தது. லீ சேம்பான் சர்லிக்னன் என்ற ஊரின் ஜனங்கள், தங்கள் போதகர் ஆன்ட்ரூ ட்ரோக்மே, அவரது மனைவி மேக்டா ஆகியோர் விடுத்த அழைப்பிற்குச் செவிகொடுத்து, யுத்த காலத்தில் தாங்களிருக்கும் பகுதியில் அடைக்கலம் தேடி வந்த யூதர்களுக்கு தைரியமாக பாதுகாப்பளித்தனர். அந்த இடம் “லா மான்டேக்ன் பிராடஸ்ட்டன்ஸ்” என்றழைக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த இசைவழி குறிப்பு, அந்த கிராமத்து மக்களின் தைரியமான செயலுக்கு ஓர் அடையாளம். இதன் மூலம் கிட்டத்தட்ட 3,000 யூதர்கள் மரணத்தினின்று காக்கப்பட்டனர்.

மற்றொரு பயங்கரமான நேரத்தில், சவுல் தாவீதைக் கொலை செய்யும் படி எதிரிகளை, இரவு நேரத்தில் தாவீதின் வீட்டிற்கு அனுப்பியபோது தாவீது பாடினான். அவனுடைய இசை ஓர் அடையாளமாக இசைக்கப்படவில்லை. அது, தனக்கு அடைக்கலமாயிருந்த தேவனுக்கு அவன் செலுத்திய நன்றி காணிக்கை. தாவீது, “நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கம் உண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும், உயர்ந்த அடைக்கலமுமானீர் (சங். 59:16).

தாவீதின் பாடல் இருளின் பயங்கரத்தில் பாடப்பட்ட பாடலல்ல. அது சர்வவல்ல தேவன் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்திய பாடல். “தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுமுள்ள என் தேவனுமாயிருக்கிறார் (வச. 17) என்று பாடினான். 

தாவீதின் துதியும், லீ சேம்பான் கிராமத்தினரின் பாடல்களும், நம்மையும் துதித்துப் பாட அழைக்கின்றது. நம் வாழ்வின் கவலைகளின் மத்தியில் நாம் அவருக்கு இசையை எழுப்புவோம் அவர் அன்போடு நமக்கு பதிலளித்து நம் இருதயங்களைப் பெலப்படுத்துவார்.