1763 ஆம் ஆண்டு, இங்கிலாந்து தேசத்தில், சோமர்செட் என்ற இடத்தில், ஒரு மலை அடிவாரத்திலுள்ள சாலை வழியே ஒரு இளம் போதகர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஏற்பட்ட கொட்டும் மழைக்கும், பயங்கர மின்னலுக்கும் தப்பும்படி ஒரு குகையினுள் அடைக்கலமானார். அங்கிருந்து சேடர் பள்ளத்தாக்குப் பகுதியைப் பார்த்து வியந்து, தனக்கு அடைக்கலமும், சமாதானமும் ஈவாகத் தந்த தேவனைக் குறித்து தியானிக்கலானார். அங்கு காத்திருந்த வேளையில், ஒரு பாடலை எழுத ஆரம்பித்தார். “பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே…’’ என்று ஆரம்பிக்கும் பாமாலை பாடலை எழுதினார்.

அகஸ்டஸ் டோப்பிளாடி இப்பாடலை எழுதிய போது, இதேப் போன்று ஒரு மலையில் மோசே பெற்ற அனுபவத்தை நினைத்திருப்பாரோ, என்னவோ நமக்குத் தெரியாது (யாத். 33:22). ஒருவேளை அப்படியும் இருந்திருக்கலாம். தேவன் மோசேக்குச் செவி கொடுத்து, இஸ்ரவேலரை விடுவிப்பதற்கான உறுதியையளிக்கின்றார் என்பதனை யாத்திராகமத்தின் இப்பகுதி விளக்குகின்றது. மோசே தேவனிடம் அவருடைய மகிமையைக் காண்பிக்கும்படி கேட்ட போது, தேவன் கிருபையாக அவனிடம், ’’ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது” என்றார் (வச. 20). அவர் மோசேயை கன்மலையின் வெடிப்பிலே வைத்து அவருடைய கரத்தினால் மூடி, அவ்விடத்தில் கடந்து சென்றார். அவருடைய பின் பக்கத்தை மட்டும் அவன் காணும்படிச் செய்தார். தேவன் அவனோடு இருக்கின்றார் என்பதை மோசே தெரிந்துகொண்டான்.

மோசேயிடம் தேவன் சொல்லிய வார்த்தைகளை நாமும் நம்புவோம். “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்” (வச. 14) என்றார். நாமும் தேவன் தரும் அடைக்கலத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மோசேயும் அந்த ஆங்கிலேயப் போதகரும் சந்தித்ததைப் போன்று நாமும் நம் வாழ்வில் அநேகப் புயல்களைச் சந்திக்கலாம். நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும் போது அவருடைய பிரசன்னம் நம்மோடிருந்து, அவருடைய சமாதானத்தால் நம்மை நிரப்பும்.