நீலக் கோடுகள்
கீழ் நோக்கிய பனிச் சறுக்கலில், பாதையைக் குறிப்பிட நீல வண்ணப் பட்டைகள் வெண்மையான பனியின் மீது தீட்டப்படும். விகற்பமான வளைவுகள் கவனச் சிதறலை ஏற்படுதுவது போல பார்வையாளர்களுக்குத் தோன்றினாலும், பங்கு பெறும் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கும், வெற்றிக்கும் அது முக்கியமானதாக அமைகின்றது. வீரர்கள் வேகமாக மலையடிவாரத்தையடைய அந்த வண்ணப் பட்டை ஒரு வழிகாட்டியாக செயல்படுகின்றது. வெண்பனியில் வரையப்பட்ட தெளிவான கோடுகள் வீரர்கள் சரியான பாதையைக் காண உதவுகின்றது. மிக வேகமாகச் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பிற்கும், மேடு பள்ளங்களைச் சரியாகக் கவனித்து, பாதுகாப்பாகச் செல்லவும் இத்தகைய வண்ணக் கோடுகள் உதவுகின்றன.
வாழ்க்கையாகிய ஓட்டத்தில், பாதுகாப்பாக ஓடுவதற்கு ஞானத்தைத் தேடும்படி தன் மகன்களை சாலமோன் வற்புறுத்துகின்றார். நீலக் கோடுகளைப் போல் ஞானம் அவர்களின் வாழ்வை நேரானப் பாதையில் அழைத்துச் செல்லும். அவர்கள் தடுமாறி விழாதபடி காத்துக் கொள்ளும் என்கின்றார் (நீதி. 4:11-12) தேவன் தரும் ஞானத்தை விட்டு விலகாமல் வாழ்ந்தால், அவர்கள் செல்வ வாழ்வை அநுபவிக்கலாம் என்பது அவர்களின் தந்தையின் ஆழ்ந்த நம்பிக்கை.
நம்முடைய அன்புத் தந்தையாகிய தேவன் நமக்கு “நீலக் கோடு” வழிகாட்டியாக வேதாகமத்தைத் தந்துள்ளார். இவ்வுலகில் நாம் எங்கு வேண்டுமானாலும் சறுக்கி விளையாட உரிமையைத் தந்துள்ளார். வேதத்தின் வழியாக அவர் தரும் ஞானம் சறுக்குதலுக்கு வழிகாட்டியாக செயல் படுகின்றது அதைக் கண்டுபிடிப்பவர்கள் வாழ்வடைவர். (வச. 22). நாம் தீமையை விட்டு விலகி, தேவனோடு நடப்போமாகில் அவருடைய நீதி, நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டும். நம் கால்கள் வழுவாதபடி அவை நம்மை காத்து ஒவ்வொரு நாளும் நாம் முன்னேறிச் செல்ல, அவை நம்மை வழி நடத்தும் (வச. 12,18)
பின்னோக்கி நடத்தல்
பிரிட்டனைச் சேர்ந்த திரைப் பட குழுவினரின் செய்திப் படக் காட்சிகளைக் கண்டு வியந்து நின்றேன். அதில் ஆறு வயது நிரம்பிய பிளானரி ஓ’கான்னோர் என்ற சிறுமியை, அவளது குடும்பப் பண்ணையில் வைத்து 1932ஆம் ஆண்டு படம் எடுத்திருந்தனர். பிளானரி, பிற்காலத்தில் அமெரிக்க தேசத்தால் பாராட்டு பெற்ற, ஒரு பிரபல எழுத்தாளராகத் திகழ்ந்தார். அவள் இந்த படப் பிடிப்பு குழுவினரின் ஆர்வத்தை ஈர்க்கக் காரணமென்னவெனின், அவள் தன்னுடைய கோழிக் குஞ்சுவிற்கு பின்னோக்கி நடப்பதற்குக் கற்றுக் கொடுத்திருந்தாள். இந்த சாதனை ஒரு புதுமை மட்டுமல்லாமல், சரித்திரத்தில் ஒரு சிறந்த உருவகமாகவும் பார்க்கப் படுகிறது. பிளானரி தன்னுடைய இலக்கிய சிந்தனைகளையும், ஆன்மீக வெளிப்பாடுகளையும் கொண்டு முப்பத்தொன்பது ஆண்டுகளைப் பின்னோக்கி நடப்பதில் செலவிட்டாள். கலாச்சார வழி முறைகளுக்கு முரண்பாடாகச் சிந்தித்து, எழுத்தில் வெளிப்படுத்தினாள். வேதகமத்தை அடிப்படையாகக் கொண்ட அவளுடைய நோக்கங்கள் மக்கள் எதிர்பார்த்த மத எண்ணங்களுக்கு மாறாக அமைந்துள்ளதைக் கண்ட புத்தக வெளியீட்டாளர்களும் வாசகர்களும் திகைத்தனர்.
இயேசுவை உண்மையாகப் பின் பற்றுபவர்களின் வாழ்வு மத சடங்காச்சாரங்களுக்கு எதிராக அமைவதை தவிர்க்க முடியாது. இயேசு தேவ குமாரனாயிருந்தும் தன்னுடைய தெய்வீகத் தன்மையை நாம் எதிர்பார்த்த வகையில் வெளிப் படுத்தவில்லை (2;6) என்பதை பிலிப்பியர் நமக்குக் காட்டுகின்றது. அவர் தன்னுடைய வல்லமையை தன் “சொந்த நலனுக்காக” பயன்படுத்தவேயில்லை. ஆனால் அவர் தன்னை வெறுமையாக்கி, அடிமையின் ரூபத்தை எடுத்துக் கொண்டார். (வச. 6-7). எல்லாப் படைப்புகளுக்கும் காரணராகிய கிறிஸ்து, அன்பினிமித்தம் தன்னை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார். அவர் கவுரவத்தைப் பற்றிக் கொள்ளவில்லை, மாறாகத் தாழ்மையைத் தழுவிக் கொண்டார். அவர் அதிகாரத்தை வைத்துக் கொள்ளவில்லை. தன்னுடைய அதிகாரத்தை விட்டுக் கொடுத்தார். உலக ஆதிக்கத்தின் வழிக்கு எதிராக இயேசு பின்னோக்கி நடந்தார்.
வேதாகமும் இதனையே வலியுறுத்துகின்றது (வச. 5). இயேசுவைப் போன்று நாமும் ஆதிக்கத்தை விட்டு விட்டு ஊழியம் செய்வோம். நம்மை முக்கியப் படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாகத் தாழ்மையைத் தெரிந்து கொள்வோம். வாங்குவதற்குப் பதிலாகக் கொடுப்போம். இயேசுவின் வல்லமையினால் நாமும் பின்னோக்கி நடப்போம்.
நான் செய்வேன்
அந்த நாளின், அதிக வேலைகளை முடித்த பின்னர் ஷர்லி சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள். அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்த போது, அங்கு ஒரு வயதான தம்பதியர், அங்கிருந்த மைதானத்தில் “இலவசம்” என எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்த பழைய வேலியின் ஒரு பகுதியை எடுத்துச் செல்ல தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டாள். ஷர்லி தன் கணவனை அழைத்துக் கொண்டு வெளியே அவர்களுக்கு உதவும் படிச் சென்றாள். அவர்கள் நால்வரும் போராடி அந்த வேலியின் ஒரு பகுதியை கை வண்டியிலேற்றி, தெரு வழியே, காண்போர் சிரிக்கும் வகையில் உருட்டிச் சென்று தெரு முனையிலுள்ள அந்த தம்பதியினரின் வீட்டிலிறக்கி விட்டு மீண்டும் மற்றப் பகுதியையெடுக்க திரும்பினர். அப்பொழுது அந்த பெண்மணி ஷர்லியிடம் “நீ என்னுடைய சிநேகிதியாக இருப்பாயா?” எனக் கேட்டாள். “ஆம், இருப்பேன்” என பதிலளித்தாள். அந்தப் பெண் வியட்நாமைச் சேர்ந்தவளெனவும், அவளுக்கு சிறிதே ஆங்கிலம் தெரியுமெனவும், அவர்களுடைய பிள்ளைகளனைவரும் தூர இடங்களிலிருப்பதால் இவர்கள் தனிமையாக இருக்கின்றனர் என்றும் பின்னர் தெரிந்து கொண்டாள்.
அந்நியராயிருப்பது எவ்வாறிருக்கும் என்பதை இஸ்ரவேலர் அறிவார்கள், என லேவியராகமத்தில் தேவன் குறிப்பிடுகின்றார் (19:34). அந்நியரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றார்
(வச. 9-19). தேவன் அவர்களை தன்னுடைய சொந்த ஜனங்களாகப் பாவித்திருக்கின்றபடியால், அவர்கள் தங்கள் சுற்றத்தாரை ஆசீர்வதிக்க வேண்டுமெனவும், தங்களிடம் அன்பு கூறுவது போல அவர்களிடமும் அன்பு கூர வேண்டுமெனவும் விரும்புகின்றார். எல்லா ஜனத்திற்கும் ஆசீர்வாதமாக தேவன் இயேசுவைத் தந்தார். அவர் தந்தையின் வார்த்தைகளை நம் எல்லாருக்கும் மீண்டும் எடுத்துரைத்தார். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில்... அன்பு கூருவாயாக; உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத். 22:37-39) என்றார்.
நம்மிலே வாசமாயிருக்கிற கிறிஸ்துவின் ஆவியினால் நாம் தேவனையும், பிறரையும் நேசிக்க முடியும். ஏனெனில் அவரே முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார். (கலாத்தியர் 5:22-23, 1யோவான் 4:19) நாமும் ஷர்லியோடு சேர்ந்து “நான் செய்வேன்” என்று கூறுவோமா?
கடைசி வார்த்தை
அவளுடைய பெயர் சரெலின். என்னுடைய பள்ளிப் படிப்பு நாட்களில் அவள் மேல் எனக்கு விருப்பம் இருந்தது. அவளுடைய சிரிப்பு மிகவும் அற்புதமாயிருக்கும். எனக்கிருந்த விருப்பத்தை அவளும் அறிந்திருந்தாளா என்பது எனக்குத் தெரியாது. அவளுக்கும் தெரியுமென்றுதான் நான் நினைத்தேன். எங்களுடைய படிப்பை முடித்ததும் அவளுடைய தொடர்பும் விட்டுப் போனது. எங்களுடைய வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் செல்ல நேர்ந்தது.
ஆனாலும் எங்களோடு பட்டம் பெற்றவர்களோடு இணைய தளத்தில் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் சரெலின் மரித்துவிட்டாளென கேள்விப்பட்ட போது மிகவும் வருத்தப்பட்டேன். அவளுடைய வாழ்க்கை, கடந்த வருடங்களில் எப்படி போய்க் கொண்டிருந்தது என்பதைக் குறித்து மிகவும் ஆச்சரியப் பட்டேன். நாமும் முதிர்வயதை எட்டும்போது நம்முடைய உறவினரையும் நண்பர்களையும் இழப்பது என்பது அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றது. நம்மில் அநேகர் அதனைக் குறித்துப் பேசுவதை விரும்புவதில்லை.
இப்படி நாம் வருத்தத்தில் இருக்கும்போது, இறப்பு என்பது ஒரு முடிவல்ல என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது (1 கொரி. 15:54-55). இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து, உயிர்த்தெழுதலைக் குறித்தும் அவர் எழுதுகின்றார். பவுலும் இந்த நம்பிக்கையை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பே பெற்றுக் கொண்டார் (வச. 12). எனவே, “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (வச. 14) என்கிறார். விசுவாசிகளாகிய நாம் இம்மைக்காக மாத்திரம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். (வச. 19)
கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களை, (வச. 18) – நம்முடைய பாட்டி, தாத்தா, பெற்றோர், நண்பர்கள், உற்றார், அருகிலுள்ளோர் மற்றும் பள்ளி நாட்களில் நாம் விரும்பியவர்களையும் கூட மீண்டும் ஒரு நாள் காண்போம். மரணம் என்பது கடைசி வார்த்தையல்ல, உயிர்த்தெழுதலே கடைசி வார்த்தை.
வழிகாட்டும் வெளிச்சம்!
அந்த உணவகம் அருமையாயிருந்தது. ஆனால் இருளாயிருந்தது. ஒவ்வொரு மேசையிலும் ஒரேயொரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தங்களுடைய அலை பேசியின் வெளிச்சத்தைப் பயன் படுத்தியே உணவருந்த வந்தவர்கள் உணவு அட்டவணையை வாசிக்கவும், தங்கள் மேசையில் அமர்ந்திருப்பவர்களைக் காணவும், தாங்கள் சாப்பிடும் உணவைப் பார்க்கவும் முடிந்தது.
கடைசியாக, அனைவரின் சார்பாகவும் ஒருவர் தன்னுடைய இருக்கையை நகர்த்தி, எழுந்து, அங்கிருந்த பொறுப்பாளரை அணுகி, “விளக்குகள் எரியும்படி சுவிட்சை உன்னால் இயக்க முடியுமா?” எனக் கேட்டார். சற்று நேரத்தில் மேற்கூரை விளக்கு எரிய ஆரம்பித்தது. அந்த அறையிலிருந்த அனைவரும் கரகோஷமிட்டனர், சிரித்தனர், மகிழ்ச்சியான குரலெழுப்பினர், நன்றி தெரிவித்தனர். என்னுடைய சிநேகிதியின் கணவன் தன்னுடைய அலைபேசி விளக்கை அணைத்தார். சாப்பிடுவதற்கான கருவிகளைக் கையிலெடுத்தார். அனைவர் சார்பாகவும் பேசினார். “வெளிச்சம் உண்டாகக் கடவது; இப்பொழுது அனைவரும் சாப்பிடலாம்” என்றார்.
ஒரு சுவிட்ச் இயக்கப்பட்ட போது, ஒரு இருண்ட மாலைப் பொழுது மகிழ்ச்சிகரமாக மாறியது. ஆனால் மெய்யான ஒளியின் காரணரைத் தெரிந்து கொள்வது இதைவிட எத்தனை முக்கியமானது! தேவன் தாமே இத்தகைய ஆச்சரியமான வார்த்தைகளைப் பேசினார். அவர் இந்த உலகத்தைப் படைத்த போது முதல் நாளில் “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்றார். “வெளிச்சம் உண்டாயிற்று” (ஆதி. 1:3) “வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்” (வச. 4)
தேவன் நம்மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பினை ஒளி காட்டுகின்றது. இந்த ஒளி நம்மை இயேசுவுக்கு நேராக வழி நடத்துகின்றது. “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவா. 8:12) என்று இயேசு கூறினார். அவர் நம்மை பாவமாகிய இருளிலிருந்து ஒளிக்குள் வழி நடத்துகின்றார். அவருடைய ஒளியில் நாம் நடக்கும் போது, குமாரன் மகிமைப்படும்படியான ஒரு வாழ்விற்குள் நாம் வழி நடத்தப் படுவோம். அவரே இவ்வுலகிற்குக் கொடுக்கப்பட்ட பிரகாசமான ஈவு. அவர் ஒளியாயிருந்து காட்டும் பாதையில் நாம் நடப்போமாக.