நாவைக் கட்டுப்படுத்துதல்
எழுத்தாளரான பெரில் மார்க்ஹாம் எழுதிய இரவில் மேற்குத்திசையில் “In west with the night” என்ற புத்தகத்தில் வரும் கதாநாயகிக்கு கம்ஸிஸ்கன் என்ற கம்பீரமான ஆண் குதிரையை பழக்கும் கடினமான பணி அவளுக்குக் கொடுக்கப் பட்டது. அவள் அநேக யுக்திகளைக் கையாண்டும் அவளால் அந்த முரட்டுக் குதிரையை அடக்க முடியவில்லை. எத்தனை முயன்றும் அதனுடைய விடாப்பிடியான குணங்களில் ஒன்றை மட்டுமே அவளால் அடக்க முடிந்தது.
நம்மில் எத்தனை பேர் இதைப் போலவே நம்முடைய நாவை அடக்க போராடிக் கொண்டிருக்கின்றோம்? அப்போஸ்தலனாகிய யாக்கோபு நாவைக் குதிரையின் கடிவாளத்திற்கும், கப்பலின் சுக்கானுக்கும் ஒப்பிடுகின்றார் (யாக். 3:3-5). மேலும், “துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது, என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது” என்று வருந்துகின்றார்.
அப்படியானால் நாவினையடக்க என்ன செய்யலாம்? அப்போஸ்தலனாகிய பவுல் நாவையடக்கும்படி சில ஆலோசனைகளைத் தருகின்றார். முதலாவது உண்மையை மட்டும் பேச வேண்டும் (எபே. 4:25). அதற்காக கடினமான வாழ்க்கைகளை உபயோகிக்க வேண்டாம். மேலும், “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம். பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும் படி பேசுங்கள்” (வச. 29) என்கின்றார். நம் பேச்சிலுள்ள வேண்டாத வார்த்தைகளை அகற்றிவிட வேண்டும். “சகல விதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும் கூக்குரலும் தூஷணமும் மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக் கடவது.”
(வச. 31) இது எளிதானதா? நம்முடைய சுய முயற்சியினால் இது கூடாததுதான். ஆனால் பரிசுத்த ஆவியானவரை நாம் சார்ந்திருக்கும் போது அவர் நமக்கு உதவி செய்கின்றார்.
கம்சிஸ்கன் என்ற குதிரையோடு போராடும் போது வெற்றி பெறும் வரை தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமென மார்க்ஹாம் கற்றுக் கொண்டார். இதைப் போன்று நாவையடக்குவதற்கும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
இதுவரை இல்லாத அளவு
பாரீஸிலுள்ள நாட்டர் டேம் கதீட்ரல் தேவாலயம், கண்ணைக் கவரும் அழகிய கட்டிடம். அதின் கட்டிடக் கலையை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. அதிலுள்ள கண்ணாடியின் வண்ணங்களும், உள் அலங்காரமும் காண்போரை பிரமிக்கச் செய்யும். ஆனால் நூற்றாண்டுகள் கடந்த பின்னர் பாரீஸில் மிக உன்னத நிலையிலிருந்த இந்தக் கட்டிடம் இப்பொழுது சிதைந்து கொண்டிருக்கிறது. காலமும், சுற்றுச் சூழலின் மாசுவும் அதன் உயர்ந்த நிலையை அழித்து விட்டன. இப்பொழுது அந்த அழகிய கட்டிடம் செப்பனிடப்பட வேண்டிய நிலையிலுள்ளது.
எட்டு நூற்றாண்டுகளாக மிளிர்ந்த இந்த ஆலயத்தை நேசிப்பவர்கள் அதனைக் காப்பாற்ற முன் வருகின்றனர். சமீபத்தில் பிரான்ஸ் அரசு ஆறு மில்லியன் டாலர்களை இந்த பேராலயத்தைச் செப்பனிட ஒதுக்கியது. இக் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் வெளிப்புறத் தூண்கள் சரி செய்யப்பட வேண்டும். அவற்றின் வெளிப்புறக் கற்கள் திரும்பப் பதிக்கப்பட வேண்டும். அதின் மேற்புற கூரையிலும் வேலைகளுள்ளன. இதில் நிறைய பணம் செலவிடப்படவுள்ளது. ஏனெனில் இந்த பழங்கால பேராலயம் அநேகரின் நம்பிக்கைக்கு அடையாளமாகத் திகழ்கின்றது.
கட்டிடங்களுக்கு எது உண்மையோ அது நமக்கும் கூடப் பொருந்தும். இந்தப் பழங்கால ஆலயத்தைப் போன்று நம்முடைய சரீரமும் பார்வைக்கு மிகவும் பழுதடைந்ததாகக் காட்சியளிக்கின்றது. அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு நல்ல செய்தியை விளக்குகின்றார். நம்முடைய புறம்பான மனிதன் இளமையின் துடிப்பை படிப்படியாக இழக்கலாம். ஆனால் உள்ளான மனிதன், அதாவது ஆவியின் மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகின்றான் (2 கொரி. 4:16).
“நாம் தேவனுக்குப் பிரியமாய் இருக்க நாடுகிறோம்” (5:9) ஆவியாயிருக்கிற கர்த்தரால் நிறைந்து அந்தச் சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப் படுகிறோம். (3:18 எபேசியர் 5:18) நம்முடைய புறம்பான சரீரம் எப்படித் தோன்றினாலும் சரி, நம்முடைய ஆவியின் மனிதனின் வளர்ச்சி என்றும் ஓய்வதில்லை.
நான் எந்த பொல்லாப்புக்கும் பயப்படேன்
1957ம் ஆண்டு, மெல்பா பட்டிலோ பீல்ஸ் “லிட்டில் ராக் நைன்” என்ற குழுவிலுள்ள ஒன்பது பேர்களில் ஒருத்தியாகத் தேர்வு செய்யப்பட்டாள். இதுவரை, வெள்ளையர்கள் மட்டுமே பயின்று வந்த லிட்டில் ராக் – அர்கன்சாஸ் உயர் நிலைப் பள்ளியில், முதல் முறையாக பள்ளிக் கல்வியை முடித்த ஆப்பிரிக்க – அமெரிக்க மாணவர்கள் இவர்கள். 2018ம் ஆண்டு இவள் எழுதிய சுய சரிதையில் “நான் பயப்பட மாட்டேன், என்னுடைய வாழ்வின் கதைகள், சோதனைகளின் மத்தியில் என்னுடைய நம்பிக்கையை உறுதிப் படுத்தின” என எழுதினாள். பதினைந்து வயதே நிரம்பிய மாணவியான பீல்ஸ் தைரியமாக ஒவ்வொரு நாளும் தான் சந்தித்த கொடுமைகளையும், அநியாயங்களையும், இருதயத்தை உடையச் செய்யும் நிகழ்வுகளையும் எழுதினாள்.
அவள் தேவன் மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையைப் பற்றியும் எழுதினாள். அந்த இருண்ட நாட்களில் பயம் அவளை மேற்கொண்ட போது, பீல்ஸ் தன்னுடைய இளம் வயதில் தன்னுடைய பாட்டியிடமிருந்து கற்றுக் கொண்ட வேத வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்திக் கொண்டாள். அவற்றை அவள் உச்சரித்த போது, தேவப் பிரசன்னம் அவளோடிருந்ததை அவள் உணர்ந்தாள். வேத வார்த்தைகள் அவளுக்குச் சோதனையைச் சகிக்க பெலன் கொடுத்தது.
பீல்ஸ் அடிக்கடி சங்கீதம் 23ஐ சொல்லிக் கொள்வாள். அவற்றைக் கூறும் போது அவளுக்கு ஆறுதல் கிடைத்தது. “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்” (வச. 4). “ தேவன் உனக்கு உன் தோலைப்போல் மிக அருகிலிருக்கின்றார்.
நீ கூப்பிடும் போது உடனே அவர் உனக்கு உதவுவார்” என்று கூறிய அவளுடைய பாட்டியின் ஊக்கந்தரும் வார்த்தைகள் அவளுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன.
நம்முடைய கடினமான சூழல்கள் வேறுவகையாக இருக்கலாம். நாம் அனைவருமே போராட்டங்களின் மத்தியில், சூழல்கள் நம்மை மேற்கொண்டு விடுமோ என்ற பயத்தில் இருக்கலாம். அத்தகைய நேரங்களில் தேவனுடைய வல்லமையான பிரசன்னம் எப்பொழுதும் நம்மோடிருக்கின்றது என்ற உண்மை நம்முடைய இருதயத்தை ஊக்குவிப்பதாக இருக்கட்டும்.
யார் வெற்றி பெறுவாரென அறிந்திருக்கும் போது
என்னுடைய மேற்பார்வையாளர், ஒரு கல்லூரியைச் சேர்ந்த கூடைப்பந்து அணியின் மிகத் தீவிர ரசிகர். இந்த ஆண்டு அவர்கள் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றனர். எனவே எங்களோடு பணிபுரியும் மற்றொரு நபர், அவருக்கு வாழ்த்து குறுஞ்செய்தி அனுப்பினார். பிரச்சனை என்னவெனில் என்னுடைய மேற்பார்வையாளருக்கு இறுதியாட்டத்தைக் காண இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் விரக்தியிலிருந்தார். அவர் இந்த முடிவு தனக்கு ஏற்கனவே தெரியும் எனவும், தான் இந்த விளையாட்டைக் காண நேர்ந்திருந்தால் முடிவை எட்டும் வேளையில் தான் மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருப்பதாகவும், ஆனால் வெற்றி பெறுபவர் யாரென்பது தனக்குத் தெரியுமெனவும் கூறினார்.
நாளை என்ன நடக்கும் என்பது நமக்கு நிச்சயம் தெரியாது. சில நாட்கள் வழக்கமான நாட்களாகவும், சில கடுமையானதாகவும் இருக்கும். வேறு சில நாட்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். இன்னும் வேறு சில நாட்களில் வாழ்க்கை கடினமானதாயும், நீண்ட காலம் துயரம் நிறைந்ததாகவும் இருக்கும்.
வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள் நம்மால் முன்னறிய முடியாததாக இருப்பினும், நாம் தேவனுடைய பாதுகாப்பினுள் சமாதானத்துடன் தங்கியிருக்க முடியும். ஏனெனில் என்னுடைய மேற்பார்வையாளரைப் போன்று நமக்கு முடிவு நன்கு தெரியும். யார் வெற்றி பெறுவார் என்பதை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.
வேதாகமத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தல், கடைசி கால காட்சிகளை நமக்குக் காட்டுகின்றது. மரணமும், பாதாளமும் தோற்கடிக்கப் பட்ட போது (20:10, 14), ஒரு மாபெரும் வெற்றியை யோவான் அழகாகச் சித்தரிக்கின்றார் (21:1-3). தேவன் தம் பிள்ளைகளோடு வாசம் பண்ணுகிறார் (வச. 3) அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். அந்த புதிய பூமியில் மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை (வச. 4).
நம்முடைய கடினமான நாட்களில் இந்த வார்த்தைகளை நாம் பற்றிக் கொள்வோம். இனி இழப்பும், அழுகையுமில்லை, உடைக்கப்பட்ட உள்ளங்களுமில்லை. மாறாக நாம் அனைவரும் சேர்ந்து நம்முடைய இரட்சகரோடு நித்தியமாய் வாழ்வோம். அந்த நாள் எத்தனை மகிமையான கொண்டாட்டமாயிருக்கும்!