என்னுடைய மேற்பார்வையாளர், ஒரு கல்லூரியைச் சேர்ந்த கூடைப்பந்து அணியின் மிகத் தீவிர ரசிகர். இந்த ஆண்டு அவர்கள் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றனர். எனவே எங்களோடு பணிபுரியும் மற்றொரு நபர், அவருக்கு வாழ்த்து குறுஞ்செய்தி அனுப்பினார்.  பிரச்சனை என்னவெனில் என்னுடைய மேற்பார்வையாளருக்கு இறுதியாட்டத்தைக் காண இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் விரக்தியிலிருந்தார். அவர் இந்த முடிவு தனக்கு ஏற்கனவே தெரியும் எனவும், தான் இந்த விளையாட்டைக் காண நேர்ந்திருந்தால் முடிவை எட்டும் வேளையில் தான் மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருப்பதாகவும், ஆனால் வெற்றி பெறுபவர் யாரென்பது தனக்குத் தெரியுமெனவும் கூறினார். 

நாளை என்ன நடக்கும் என்பது நமக்கு நிச்சயம் தெரியாது. சில நாட்கள் வழக்கமான நாட்களாகவும், சில கடுமையானதாகவும் இருக்கும். வேறு சில நாட்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். இன்னும் வேறு சில நாட்களில் வாழ்க்கை கடினமானதாயும், நீண்ட காலம் துயரம் நிறைந்ததாகவும் இருக்கும்.

வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள் நம்மால் முன்னறிய முடியாததாக  இருப்பினும், நாம் தேவனுடைய பாதுகாப்பினுள் சமாதானத்துடன் தங்கியிருக்க முடியும். ஏனெனில் என்னுடைய மேற்பார்வையாளரைப் போன்று நமக்கு முடிவு நன்கு தெரியும். யார் வெற்றி பெறுவார் என்பதை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.

வேதாகமத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தல், கடைசி கால காட்சிகளை நமக்குக்  காட்டுகின்றது. மரணமும், பாதாளமும் தோற்கடிக்கப் பட்ட போது (20:10, 14), ஒரு மாபெரும் வெற்றியை யோவான் அழகாகச் சித்தரிக்கின்றார் (21:1-3). தேவன் தம் பிள்ளைகளோடு வாசம் பண்ணுகிறார் (வச. 3) அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். அந்த புதிய பூமியில் மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை (வச. 4).

நம்முடைய கடினமான நாட்களில் இந்த வார்த்தைகளை நாம் பற்றிக் கொள்வோம். இனி இழப்பும், அழுகையுமில்லை, உடைக்கப்பட்ட உள்ளங்களுமில்லை. மாறாக நாம் அனைவரும் சேர்ந்து நம்முடைய இரட்சகரோடு நித்தியமாய் வாழ்வோம். அந்த நாள் எத்தனை மகிமையான கொண்டாட்டமாயிருக்கும்!