என்னுடைய குழந்தைப் பருவத்தில், என்னுடைய ஆலயத்தைக் குறித்து என் நினைவில் தங்கியிருக்கும் ஒரு காட்சி – எங்கள் போதகர் ஆலயத்தின் நடுப் பகுதி வழியே நடந்து வந்து “ஞானஸ்நானத்தின் தண்ணீரை நினைத்துக் கொள்ளுங்கள்” என்பார். ஞானஸ்நானத்தின் தண்ணீரை நினைவு படுத்துவதா? நான் எனக்குள்ளாகவே கேட்டுக் கொள்வேன். தண்ணீரை எப்படி நினைவில் வைப்பது? அத்தோடு அவர் ஒவ்வொருவர் மீதும் தண்ணீரைத் தெளிப்பார். குழந்தையாக இருந்த எனக்கு அது மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது.
நாம் ஏன் ஞானஸ்நானத்தை நினைவு கூர வேண்டும்? ஒரு மனிதன் ஞானஸ்நானம் பெறும் போது தண்ணீரை விட மேலான அநேகக் காரியங்கள் அதில் அடங்கியுள்ளன. ஞானஸ்நானம் என்பது இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால் நாம் அவரையே தரித்துக் கொள்கின்றோம் (கலா. 3:27) என்பதன் அடையாளம். இன்னும் சொல்வோமாகில், நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களென்பதையும், அவர் நம்மில், நம்மோடு வாசமாயிருக்கிறார் என்பதையும் நாம் ஞானஸ்நானத்தின் மூலம் கொண்டாடுகின்றோம்.
நாம் சொல்லிக் கொள்ளக் கூடிய அளவு எந்த முக்கியத்துவமும் வாய்ந்தவர்களல்ல, ஆனால் நாம் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டவர்களானால் நம்முடைய அடையாளம் அவர் மூலமாய் வெளிப்படுகின்றது.. நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம் (வச. 26) என இப்பகுதி தெரிவிக்கின்றது. நாம் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொண்டதாலல்ல, தேவன் மீதுள்ள விசுவாசத்தினாலேயே நீதிமான்களாக்கப் பட்டோம் (வச. 23-25). எனவே, நமக்குள் ஆண், பெண் என்றோ, கலாச்சாரத்தினாலோ அல்லது தகுதியினடிப்படையிலோ எந்தப் பிரிவும் இல்லை. நாம் விடுதலையாக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் நாமனைவரும் ஒன்றாயிருக்கின்றோம். இப்பொழுது, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் (வ 28)
எனவே, நாம் ஞானஸ்நானத்தை நினைவு கூரவும், அதன் முக்கியத்துவத்தை உணரவும் காரணங்களுள்ளன. நாம் வெறுமனே ஞானஸ்நானத்தை சடங்காச்சாரமாகப் பார்க்காமல், நாம் தேவனுக்குச் சொந்தமாகிறோம், அவருடைய பிள்ளையாகிறோம், என்பதை நினைவில் கொள்ளுவோம். நம்முடைய அடையாளமும், எதிர் காலமும், ஆவியின் விடுதலையும் அவருக்குள் உண்டாயிருக்கின்றது.
கிறிஸ்துவைத் தரித்துக் கொள்வதும், அவருக்குச் சொந்தமாவதும், உனக்கு எதை வெளிப் படுத்துகின்றது? என்ன வகையில் ஞானஸ்நானத்தின் அர்த்தத்தை நினைவு கூர்ந்து, கொண்டாட விரும்புகின்றாய்?
தேவனே, இயேசு கிறிஸ்துவின் மூலம் நான் தேவனுடைய பிள்ளையாகின்றேன் என்பதை நான் ஒரு போதும் மறந்து விடாதபடி எனக்குதவியருளும்.