1722ஆம் ஆண்டு செக்கஸ்லோவேக்கியாவில் வாழ்ந்த ஒரு சிறு கூட்டமான மொரேவியன் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலுக்குத் தப்பி, தயாளகுணம் படைத்த ஒரு ஜெர்மானிய சீமானை அடைந்தனர். நான்கு ஆண்டிற்குள் மேலும் 300 பேர் வந்து சேர்ந்தனர். உபத்திரவப் பட்ட இந்த அகதிகள், ஒரே குழுவாகத் தங்கியிருப்பதற்குப் பதிலாக தங்களுக்குள் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தினர். கிறிஸ்தவத்தை வெவ்வேறு கண்ணோட்டத்துடன் பார்த்து பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அப்பொழுது அவர்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பளிக்கப் பட்டது. அது அவர்களுக்குள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அவர்களனைவரும் எதை ஏற்றுக் கொள்ளவில்லையோ அதை விட்டு விட்டு, எதை ஏற்றுக் கொள்கின்றனரோ அதை மட்டுமே முக்கியப் படுத்த ஆரம்பித்தனர். அதன் விளைவாக ஒற்றுமை ஏற்பட்டது.
எபேசு சபை விசுவாசிகளை ஒற்றுமையாக வாழும்படி அப்போஸ்தலனாகிய பவுல் ஊக்கப் படுத்துகின்றார். பாவம், எப்பொழுதும் பிரச்சனைகளையும், தன்னலத்தையும், உறவுகளில் விரிசலையும் கொண்டு வரும். கிறிஸ்துவினால் புதிய வாழ்வைப் பெற்றுக் கொண்ட எபேசு சபையினர் தாங்கள் பெற்றுக் கொண்ட புதிய அடையாளத்தை, செயலில் காட்டி வாழும்படி சொல்கின்றார். (எபேசியர் 5:2) எல்லாவற்றிற்கும் மேலாக “சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” (4:3) என்கிறார்.
இந்த சமாதானமும் ஒற்றுமையும் மனிதரின் திறமையால் கொண்டு வரக்கூடிய நட்புறவுகள் அல்ல. நாம், “மிகுந்த மனத் தாழ்மையும், சாந்தமும், நீடிய பொறுமையும் உடையவர்களால் அன்பினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும் (வச. 2) இது மனிதனால் கூடாதது. நம்முடைய சொந்த முயற்சியால் நாம் ஒற்றுமையைக் கொண்டு வர முடியாது. “மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற தேவ வல்லமையின் படியே” இது கூடும் (3:20).
உன்னுடைய விசுவாசக் குடும்பத்தில் பிரிவினையையா, அல்லது ஒற்றுமையையா, எதை அநுபவிக்கின்றாய்? ஆவியின் ஒருமைப்பாட்டைப் பெற என்னென்ன முயற்சிகளை தேவ பெலத்தோடு எடுக்கின்றாய்?
தந்தையே, எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுகை செய்பவரே, எங்களுக்குள் வாசமாயிருந்து நாங்கள் ஒற்றுமையாய் வாழ உதவியருளும்.