1957ம் ஆண்டு, மெல்பா பட்டிலோ பீல்ஸ் “லிட்டில் ராக் நைன்” என்ற குழுவிலுள்ள ஒன்பது பேர்களில் ஒருத்தியாகத் தேர்வு செய்யப்பட்டாள். இதுவரை, வெள்ளையர்கள் மட்டுமே பயின்று வந்த லிட்டில் ராக் – அர்கன்சாஸ் உயர் நிலைப் பள்ளியில், முதல் முறையாக பள்ளிக் கல்வியை முடித்த ஆப்பிரிக்க – அமெரிக்க மாணவர்கள் இவர்கள். 2018ம் ஆண்டு இவள் எழுதிய சுய சரிதையில் “நான் பயப்பட மாட்டேன், என்னுடைய வாழ்வின் கதைகள், சோதனைகளின் மத்தியில் என்னுடைய நம்பிக்கையை உறுதிப் படுத்தின” என எழுதினாள். பதினைந்து வயதே நிரம்பிய மாணவியான பீல்ஸ் தைரியமாக ஒவ்வொரு நாளும் தான் சந்தித்த கொடுமைகளையும், அநியாயங்களையும், இருதயத்தை உடையச் செய்யும் நிகழ்வுகளையும் எழுதினாள்.
அவள் தேவன் மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையைப் பற்றியும் எழுதினாள். அந்த இருண்ட நாட்களில் பயம் அவளை மேற்கொண்ட போது, பீல்ஸ் தன்னுடைய இளம் வயதில் தன்னுடைய பாட்டியிடமிருந்து கற்றுக் கொண்ட வேத வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்திக் கொண்டாள். அவற்றை அவள் உச்சரித்த போது, தேவப் பிரசன்னம் அவளோடிருந்ததை அவள் உணர்ந்தாள். வேத வார்த்தைகள் அவளுக்குச் சோதனையைச் சகிக்க பெலன் கொடுத்தது.
பீல்ஸ் அடிக்கடி சங்கீதம் 23ஐ சொல்லிக் கொள்வாள். அவற்றைக் கூறும் போது அவளுக்கு ஆறுதல் கிடைத்தது. “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்” (வச. 4). “ தேவன் உனக்கு உன் தோலைப்போல் மிக அருகிலிருக்கின்றார்.
நீ கூப்பிடும் போது உடனே அவர் உனக்கு உதவுவார்” என்று கூறிய அவளுடைய பாட்டியின் ஊக்கந்தரும் வார்த்தைகள் அவளுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன.
நம்முடைய கடினமான சூழல்கள் வேறுவகையாக இருக்கலாம். நாம் அனைவருமே போராட்டங்களின் மத்தியில், சூழல்கள் நம்மை மேற்கொண்டு விடுமோ என்ற பயத்தில் இருக்கலாம். அத்தகைய நேரங்களில் தேவனுடைய வல்லமையான பிரசன்னம் எப்பொழுதும் நம்மோடிருக்கின்றது என்ற உண்மை நம்முடைய இருதயத்தை ஊக்குவிப்பதாக இருக்கட்டும்.
உன்னுடைய பயந்த சூழலில் தேவனுடைய பிரசன்னத்தை எப்பொழுது உணர்ந்திருக்கின்றாய்? தேவன் எப்பொழுதும் உன்னோடிருக்கிறார் என்ற உண்மை உனக்கு ஆறுதலைத் தருவதாக உள்ளதா?.
அப்பா, சூழ் நிலைகள் என்னை பயப்படுத்தும் போது, நீர் என்னோடிருக்கின்றீர் என்பதை நினைவில் கொள்ளவும், உம்முடைய வல்லமையுள்ள பிரசன்னத்தில் நான் தைரியம் பெற்றுக்கொள்ளவும் எனக்குதவியருளும்