அந்த உணவகம் அருமையாயிருந்தது. ஆனால் இருளாயிருந்தது. ஒவ்வொரு மேசையிலும் ஒரேயொரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தங்களுடைய அலை பேசியின் வெளிச்சத்தைப் பயன் படுத்தியே உணவருந்த வந்தவர்கள் உணவு அட்டவணையை வாசிக்கவும், தங்கள் மேசையில் அமர்ந்திருப்பவர்களைக் காணவும், தாங்கள் சாப்பிடும் உணவைப் பார்க்கவும் முடிந்தது.
கடைசியாக, அனைவரின் சார்பாகவும் ஒருவர் தன்னுடைய இருக்கையை நகர்த்தி, எழுந்து, அங்கிருந்த பொறுப்பாளரை அணுகி, “விளக்குகள் எரியும்படி சுவிட்சை உன்னால் இயக்க முடியுமா?” எனக் கேட்டார். சற்று நேரத்தில் மேற்கூரை விளக்கு எரிய ஆரம்பித்தது. அந்த அறையிலிருந்த அனைவரும் கரகோஷமிட்டனர், சிரித்தனர், மகிழ்ச்சியான குரலெழுப்பினர், நன்றி தெரிவித்தனர். என்னுடைய சிநேகிதியின் கணவன் தன்னுடைய அலைபேசி விளக்கை அணைத்தார். சாப்பிடுவதற்கான கருவிகளைக் கையிலெடுத்தார். அனைவர் சார்பாகவும் பேசினார். “வெளிச்சம் உண்டாகக் கடவது; இப்பொழுது அனைவரும் சாப்பிடலாம்” என்றார்.
ஒரு சுவிட்ச் இயக்கப்பட்ட போது, ஒரு இருண்ட மாலைப் பொழுது மகிழ்ச்சிகரமாக மாறியது. ஆனால் மெய்யான ஒளியின் காரணரைத் தெரிந்து கொள்வது இதைவிட எத்தனை முக்கியமானது! தேவன் தாமே இத்தகைய ஆச்சரியமான வார்த்தைகளைப் பேசினார். அவர் இந்த உலகத்தைப் படைத்த போது முதல் நாளில் “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்றார். “வெளிச்சம் உண்டாயிற்று” (ஆதி. 1:3) “வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்” (வச. 4)
தேவன் நம்மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பினை ஒளி காட்டுகின்றது. இந்த ஒளி நம்மை இயேசுவுக்கு நேராக வழி நடத்துகின்றது. “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவா. 8:12) என்று இயேசு கூறினார். அவர் நம்மை பாவமாகிய இருளிலிருந்து ஒளிக்குள் வழி நடத்துகின்றார். அவருடைய ஒளியில் நாம் நடக்கும் போது, குமாரன் மகிமைப்படும்படியான ஒரு வாழ்விற்குள் நாம் வழி நடத்தப் படுவோம். அவரே இவ்வுலகிற்குக் கொடுக்கப்பட்ட பிரகாசமான ஈவு. அவர் ஒளியாயிருந்து காட்டும் பாதையில் நாம் நடப்போமாக.
எந்த சூழ்நிலையில் இயேசுவின் ஒளி உன் மீது வீசும்படி விரும்புகின்றாய்? அவருடைய ஒளி உன்னை எப்பொழுது வழி நடத்தியது?
தேவனே, இவ்வுலகிற்கு வெளிச்சமாகவும், அவருடைய அன்பினால் எங்களை வழி நடத்தும் ஒளியாகவும் இயேசுவை எங்களுக்கு தந்தபடியால் உமக்கு நன்றி கூறுகிறேன்.