நான் ஜெர்மனி நாட்டில் இராணுவத்தில் பணிபுரிந்தபோது, புத்தம்புதிய 1969 வோக்ஸ்வேகன் பீட்ல் கார் ஒன்றை வாங்கினேன். அருமையான கார்! அதன் வெளிப்புற அடர் பச்சை நிறத்தையும், உட்புற லெதர் அலங்காரத்தையும் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும். வருடங்கள் உருண்டோடின, வண்டியும் பழசாகியது. அதுபோதாதென்று ஒரு விபத்து வேறு. அதனால் காரின் பக்கவாட்டில் இருக்கும் கால்மிதி பகுதி சேதமடைந்தது. காரின் கதவுகளில் ஒன்று உடைந்துபோனது. “மீண்டும் புதுப்பிப்பதற்கு இந்தக் கார் முற்றிலும் தகுதியானதுதான்” என்று என் கற்பனையில் உதித்திருக்கலாம். அதிக பண செலவில் அதைப் புதுப்பித்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் நான் செய்யவில்லை.
ஆனால் தேவனுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். அவர் மிகச்சரியாகப் பார்க்கக்கூடியவர், அளவில்லா வளங்களைப் பெற்றிருப்பவர். வாழ்க்கையில் அடிபட்டு, உடைந்துபோனவர்களை அவர் கைவிடுவதில்லை. மீண்டும் புதுப்பிக்கப்படத் தகுதியானவர்கள் யார் என்பதுபற்றியும் புதுப்பிக்க வல்லவரான தேவனைப் பற்றியும் சங்கீதம் 85 சொல்லுகிறது. தேவனுக்கு எதிராக கலகம் செய்ததின் விளைவாக இஸ்ரவேலர் நாடு கடத்தப்பட்டார்கள், பிறகு எழுபது வருடங்கள் கழித்து அந்தச் சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்தார்கள், அதை மனதில் வைத்தே இந்தச் சங்கீதம் எழுதப்பட்டிருக்கவேண்டும். தேவன் தங்கள் பாவங்களை மன்னித்து, தங்கள்மேல் தயவுகாட்டியதை எண்ணிப்பார்த்தார்கள் (வச. 1-3). உடனே தேவனிடம் உதவி கேட்கவும் (வச. 4-7), அவரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்க்கவும் (8-13) ஊக்கம் பெற்றார்கள்.
அடிபட்டு, நொந்து, உடைந்துபோகிற அனுபவம் யாருக்குத்தான் உண்டாவதில்லை? இவ்வாறு நேரிடுவதற்கு சிலசமயங்களில் நாமேகூட காரணமாக இருக்கலாம். ஆனால், நம்முடைய தேவன் புதுப்பித்தலின் தேவன், பாவமன்னிப்பின் தேவன். தாழ்மையோடு அவரிடம் செல்கிற எவருக்கும் நம்பிக்கை உண்டு. தம்மிடம் வருகிறவர்களை இருகரம் நீட்டி அவர் வரவேற்கிறார்; அவ்வாறு வருகிறவர்கள் அவர்களுடைய கரங்களில் தஞ்சம் புகலாம்.
ஆண்டவரே, என் வாழ்க்கையில் நான் புதுப்பிக்கப்படவேண்டியது அவசியமென சுட்டிக்காட்டுகிற அறிகுறிகளை நான் அலட்சியம் செய்யாதபடிக்கு எனக்கு உதவும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் படிப்படியாகப் புதுப்பிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? உங்களைப் புதுப்பிக்கிற தேவனுக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?