மரணம் மோசமான ஒரு நிஜம். நம் வாழ்நாளோ மிகவும் குறுகியது. பாபி மரித்தபோதுதான் இந்த உண்மை எனக்கு பளிச்செனத் தெரிந்தது. அவள் என்னுடைய சிறுபிராயத் தோழி, இருபத்து நான்கு வயதுதான், பனிமூடிய சாலையில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் அவள் பலியானாள். பிரச்சனைமிக்க ஒரு குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில்தான் அவளுடைய வாழ்க்கை சற்றே பசுமையாகி வந்தது. இயேசுவையும் அவள் ஏற்றுக்கொண்டு சிலகாலம்தான் ஆகிறது. இவ்வளவு சீக்கிரத்தில் அவள் ஏன் மரிக்கவேண்டும்?
வாழ்க்கை மிகவும் குறுகியதாகவும், முற்றிலும் வருத்தம் நிறைந்ததாகவும் சிலசமயங்களில் மாறிவிடுகிறது. சங்கீதம் 39 இல் தன்னுடைய பாடுகளை நினைத்து புலம்புகிறார் தாவீது; “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்” என்று சொல்கிறார். (வச. 4-5). வாழ்க்கை குறுகியது. நாம் நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் என்ன, ஒட்டுமொத்த காலங்களோடும் ஒப்பிடும்போது பூமியில் நம் வாழ்க்கை ஒரு துளியளவுகூட வராதே!
தாவீதோடு சேர்ந்து நாமும் “நீரே (கர்த்தரே) என் நம்பிக்கை” என்று சொல்லலாம். வசனம் 7. நாம் வாழ்வதில் அர்த்தமிருக்கிறது என்று நம்பலாம். நம்முடைய மாமிசம் அழுகி, ஒன்றுமில்லாமல் போனாலும், “உள்ளான மனுஷன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்” என்றும், ஒருநாளில் அவரோடு நாம் நித்தியமாக வாழப்போகிறோம் என்றும் உறுதியாக விசுவாசிக்கலாம். 2கொரிந்தியர் 4:16-5:1. இவ்வாறு நிச்சயம் நடக்குமென்று “ஆவியென்னும் அச்சாரத்தை” தேவன் நமக்குத் தந்திருக்கிறார். 2கொரிந்தியர் 5:5.
இந்த வாழ்க்கை இறுதியல்ல என்பதற்காக ஆண்டவரே, உமக்கு நன்றி! உம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நித்திய வாழ்வை நீர் வைத்திருக்கிறீர். குறுகிய எங்களுடைய வாழ்நாட்களை உம்முடைய சேவையில் நாங்கள் செலவிட எங்களுக்கு உதவும்.
தேவனோடு நித்திய வாழ்வில் நாமும் பங்குபெறுவதை தேவன் சாத்தியமாக்கியிருக்கிறார். இந்த உண்மை எவ்வளவு தூரம் ஆறுதலாக இருக்கிறது? ஒவ்வொரு கணத்தையும் தேவன் ஈவாகக் கொடுக்கிறார். நேரத்தை பயன்மிக்க விதத்தில் செலவிடுவதற்கு இந்த உண்மை எவ்வாறு உங்களை ஊக்கப்படுத்துகிறது?