என் சிறுபிராயத்தில், மற்ற சிறுவர்கள் போலவே நானும் ஒரு குறும்புக்கார சிறுமிதான். யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் திருட்டுத்தனமாக சேட்டைசெய்வேன். ஆனாலும் அம்மாவிடம் மாட்டிக்கொள்வது வழக்கமான ஒன்று. என் குறும்புத்தனங்களை சரியாகவும், உடனடியாகவும் அம்மா கண்டுபிடிப்பார், எனக்கு ஆச்சரியமாக இருக்கும். உண்மை எப்படி அம்மாவுக்குத் தெரிகிறது என்கிற பிரமிப்போடு அவரிடம் அதுபற்றிக் கேட்பேன்; உடனே அவர் “தலைக்கு பின்புறமும் எனக்கு கண்கள் உண்டு” என்று சொல்வார். அதனால் அம்மா திரும்பி நிற்கிற சமயங்களில் எல்லாம் கண்களைத் தேடிப்பார்த்திருக்கிறேன். ‘என்னுடைய பார்வைக்கு அந்தக் கண்கள் தெரியாதோ, அம்மாவின் சிவப்புநிற முடிகளுக்குள் கீழ் மறைந்திருக்குமோ?’ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். நான் வளர்ந்தபிறகு, கண்களைத் தேடுவதை நிறுத்தினேன். அம்மாவுக்குத் தெரியாமல் எதுவும் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது. அதாவது அவ்வளவுக்கு அவர் தன் பிள்ளைகளைக் கவனித்திருக்கிறார். அன்போடு தன் பிள்ளைகள்மேல் அவர் காட்டிய அக்கறைதான் அதற்கு காரணம்.
அம்மாவின் அன்பான கவனிப்புக்கு நான் நன்றிசொல்ல வேண்டும் (அம்மாவிடம் மாட்டிக்கொள்ளாமல் ஒரு குறும்புத்தனம்கூட செய்யமுடியவில்லையே என்று அவ்வப்போது நான் நினைப்பதும் உண்டு.) ஆனால், பரேலாகத்திலிருந்து தேவன் நம்மைப் பார்க்கிறார் , “எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்” என்பது அவர்மேல் மிகுந்த நன்றியுணர்வை உண்டாக்குகிறது (சங். 33:13). நாம் செய்கிறவற்றை மட்டுமல்ல, அதற்கும் அதிகமாக அவருக்குத் தெரியும். நம்முடைய வருத்தங்கள், சந்தோஷங்கள், ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு என அனைத்தையும் அவர் அறிவார்.
தேவன் நம்முடைய மெய்யான குணத்தைப் பார்த்து, நமக்கு இன்னும் என்ன தேவைப்படுகிறது என்பதை மிகசரியாக அறிகிறார். நம்முடைய இருதயங்களின் உள்ளிந்திரியங்களையும் காண்கிற அளவுக்கு ஊடுருவி பார்க்க வல்லவர், தம்மேல் அன்புகூர்ந்து, தம்மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள்மேல் கண்ணோக்கமா யிருக்கிறார் (வச. 19). நம்மேல் அன்பும் அக்கறையும் வைத்திருக்கும் பிதா அவர்.
அன்புள்ள பிதாவே, எல்லா மக்கள்மேலும் நீர் கண்ணோக்கமாக இருக்கிறீர்; எங்களுடைய உலகத்திலும் என்னுடைய வாழ்க்கையிலும் நிகழ்வதை நீர் பார்த்துக் கொண்டிருக்கிறீர், அதற்காக நன்றி.
தேவன் அனைத்தையும் காண்கிறார், அவர் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருக்கிறார் என்பதை அறிவது உங்களுக்கு எவ்வாறு ஆறுதலளிக்கிறது? உங்களுடைய குணத்தைச் சரியாக்குவதற்கு சமீப காலமாக அவர் எவ்வாறு செயல்பட்டு வருகிறார்?