என்னுடைய மாமியாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் அனைவருமே மிகுந்த பதட்டத்திற்குள்ளானோம். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கமுடிந்தது. பிறகு மருத்துவரிடம் பேசியபோது, மாரடைப்பு வந்ததும் 15 நிமிடங்களுக்குள் சிகிச்சை எடுத்தால் அபாயக்கட்டம் நீங்கி 33 சதவீதம்பேர் பிழைப்பதாகச் சொன்னார். 15 நிமிடங்களுக்கு பிறகு சிகிச்சை எடுப்பவர்களில் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே பிழைக்கிறார்களாம்.
யவீருவின் மகள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள் (உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது), அவளைக் குணமாக்குவதற்காகச் சென்றுகொண்டிருந்த இயேசு, யாருமே யோசித்திராத வகையில் இடையில் நின்றுவிட்டார் (மாற். 5:30). தம்மைத் தொட்டது யார் என்பதை அறியும்படி நின்றார், தம்மைத் தொட்ட பெண்ணிடம் அன்புடன் பேசினார். யவீரு என்ன யோசித்திருப்பார்? ‘என் மகள் மரிக்கப்போகிறாள், இந்த நேரத்தில் இப்படி காலதாமதமாகிறதே?’ இயேசு அங்கு வெகுநேரம் நின்றுவிட்டார் போலும், யவீரு பயந்ததுபோலவே நடந்தது; அவனுடைய மகள் மரித்துப்போனாள். வசனம் 35.
ஆனால் இயேசு யவீருவிடம் திரும்பி, அவனுக்கு ஆறுதலான ஒரு வார்த்தையைக் கூறுகிறார்: “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” (வச. 36). பிறகு யவீருவின் வீட்டிற்குச் சென்றதும் தன்னைப் பரிகாசமாகப் பார்த்த யாரையுமே பொருட்படுத்தாமல், யவீருவின் மகளைப் பார்த்து, அவளை எழுந்திருக்கச் சொல்லி, மீண்டும் உயிரோடு கொண்டுவந்தார்! ஒருபோதும் தாம் காலதாமதம் பண்ணுவதில்லை என்பதை அங்கு வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் வல்லமைக்கும், அவர் செய்யத் தீர்மானித்திருப்பதற்கும் காலம் தடைபோடவே முடியாது.
நான் நம்பியிருந்தபடி செய்யாமல் தேவன் காலந்தாழ்த்திவிட்டாரே என்று எத்தனை நேரம் யவீருவைப் போல நாமும் நினைத்திருப்போம். ஆனால் அவ்வாறு ஒருபோதும் செய்யமாட்டார். நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய நன்மையான, இரக்கமான கிரியைகளை நிறைவேற்ற அவர் காலந்தாழ்த்தவே மாட்டார்.
இயேசுவே, காலத்தின் மேலும் கட்டுப்பாடு உள்ளவர் நீர் என்பதையும் உம்முடைய பரிபூரண திட்டங்களை நிறைவேற்றுவதில் நீர் காலந்தாழ்த்துவதில்லை என்பதையும் நான் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள எனக்கு உதவும்.
தேவன் காலந்தவறுவதில்லை என்பதை சமீபத்தில் எப்போது கண்டுகொண்டீர்கள்? தேவனுடைய கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் இருக்கின்றன என்பதை நம்பி வாழ்வதும், அவருடைய திட்டங்களே சிறந்தவை என்று ஒத்துக்கொள்வதும் ஏன் மிகவும் முக்கியமானது?