நானும் என் கணவரும் தேனிலவை முடித்துவிட்டு எங்களுடைய ஊருக்குத் திரும்பும்போது, விமான நிலையத்தில் லக்கேஜ்களை ஏற்றும் பகுதியில் காத்திருந்தோம். என் கணவரை முழங்கையால் இலேசாக இடித்து, பக்கத்தில் நின்றிருந்த ஒருவரைக் காட்டினேன்.

என் கணவரும் ஓரக்கண்ணால், “யார் அவர்” என்று சைகையால் கேட்டார்.

அவர் ஒரு நடிகர், அவர் பிரபலமாகப் பேசப்படும் கதாபாத்திரங்கள் பற்றிச் சொன்னேன். பிறகு நாங்கள் இருவரும் அவரிடம் சென்று, எங்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். இருபத்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டாலும், ஒரு திரைப்பட நடிகரைச் சந்தித்த அனுபவம் இன்றும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

பிரபல நடிகர் ஒருவரைச் சந்திப்பது ஒரு புறத்தில் இருக்கட்டும். ஆனால் அதைவிட முக்கியமான ஒருவரை தனிப்பட்ட விதத்தில் அறிந்துகொண்டதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். “யார் இந்த மகிமையின் ராஜா?” (சங். 24:8).  சர்வவல்ல தேவனாகிய அவரை சிருஷ்டிகர், போஷித்துக் காப்பாற்றுகிறவர், சர்வத்தை ஆளுகிறவர் என்று சங்கீதக்காரன் சுட்டிக்காட்டுகிறார்.  “பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.  அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்” என்று புகழ்ந்து பாடுகிறார் (வச. 1-2).  முற்றிலும் பிரமித்தவராக, தேவன் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றும், ஆனாலும் அவரிடம் நாம் செல்லமுடியும் என்றும் தாவீது கூறுகிறார் (வச. 3-4).  அவருக்காக நாம் வாழும்போது, அவரைப் பற்றி அறிந்துகொள்ளலாம், அவருடைய வல்லமையைப் பெறலாம், அவர் நமக்காக யுத்தம்செய்வார் என்று நம்பிக்கையோடு இருக்கலாம் (வச. 8).

தேவனைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு அவரே வாய்ப்புகளை உண்டாக்குகிறார்; அவர் மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு பிரபலமானவராக இருக்கிறார். அவரைப் பற்றி உணர்ந்துகொள்ளாதவர்கள்கூட, நம்மில் அவருடைய குணம்பிரதிபலிப்பதைப் பார்க்கும்போது, “அவர் யார்” என்று கேட்பதற்கான அதிகமான வாய்ப்புகள் உண்டாகும்.  தாவீதைப் போல நாமும் பிரமிப்புக்குள்ளாகி தேவனைச் சுட்டிக்காட்டலாம்; அவரைப் பற்றிச் சொல்லலாம்.