வட கரோலினாவில் எங்களுடைய வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் மணல்பாங்கான ஒரு சிறு ஈரநிலப்பகுதியில்தான் வீனஸ் என்கிற பூச்சுண்ணி தாவரத்தை முதன்முதலாகக் கண்டுபிடித்தார்கள். ஊனுண்ணியான இந்தத் தாவரத்தைப் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
வீனஸ் பூச்சுண்ணி தாவரங்கள் பார்ப்பதற்கு விரிந்த ஒரு பூ போலத் தெரியும். ஆனால் அது ஒரு கண்ணியமைப்பு. மணமிக்க தேன் போன்ற திரவம் அதனுள்ளே சுரக்கும். பூச்சிகள் அதற்குள்ளாக ஊர்ந்துசெல்லும்போது அதன் வெளிப்புற விளிம்போரங்களில் உள்ள சென்சார்கள் தூண்டப்படும், பொறியின் கதவுகள் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் இறுக மூடிக்கொள்ளும். இரை உள்ளே மாட்டிக்கொள்ளும். அந்தப் பொறியானது இரையை மேலும் இறுக்கி, நொதி திரவங்களை வெளியிட்டு, அந்த இரையை கொஞ்சம் கொஞ்சமாக உணவாக்கிவிடும். அந்த மணல்பாங்கான பகுதியில் கிடைக்காத ஊட்டச்சத்தை இவ்வாறு பெற்றுக்கொள்ளும்.
நாம் எதிர்பாராத நேரத்தில் நம்மைச் சிக்கவைக்கும் வேறொரு பொறி பற்றி வேதாகமம் கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் தன் சீடனான தீமோத்தேயுவுக்குச் சொல்லும் புத்திமதியில் அதைக் காணமுடிகிறது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.” மேலும், “சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” (1 தீமோ. 6:9-10).
பணமும் பொருட்களும் சந்தோஷத்திற்கு உத்தரவாதமளிப்பது போலத் தோன்றலாம், ஆனால் வாழ்க்கையில் அவற்றிற்கு முதலிடம் கொடுத்துவிட்டால், அது பொறியில் கால்வைப்பதற்கு சமமாகும். இயேசுவின் மூலம் தேவன் நமக்குச் செய்திருக்கிற நன்மையை மட்டுமே எண்ணி, நன்றியும் தாழ்மையும் நிறைந்த இருதயங்களோடு வாழும்போது இந்தப் பொறியிலிருந்து தப்பலாம். ஏனென்றால், “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.”
தேவன் தருகிற மனரம்மியத்தை இந்த உலகத்தின் தற்காலிக பொருட்களால் தரவே முடியாது. அவரோடு நாம் உறவு வைத்தால்தான் மெய்யான, நிலையான மனநிம்மதியைக் காணமுடியும்.
அன்புள்ள ஆண்டவரே! என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம் நீர்! நீரே எல்லாவற்றிற்கும் போதுமானவர் என்பதை உணர்ந்து, இன்று நான் மனரம்மியத்தோடு வாழ்வதற்கு உதவிசெய்யும்.
எதைப் பற்றி எப்போதும் யோசிக்கிறீர்கள்? பணத்தை பற்றியா அல்லது தேவனோடுள்ள உறவு பற்றியா? நம் வாழ்க்கையில் அவருக்கு முதல் இடத்தைக் கொடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?