பால் டூர்னியர் என்பவர் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மருத்துவர்; அதிகம் மதிக்கப்பட்ட போதக ஆலோசகர். அவருடைய விரிவுரை ஒன்றைக் கேட்கிற சிலாக்கியம் போதகரும் எழுத்தாளருமான யூஜீன் பீட்டர்சனுக்குக் கிடைத்தது. மருத்துவரின் பணிகள் பற்றி பீட்டர்சன் வாசித்திருக்கிறார், மேலும் குணப்படுத்துவதற்கு மருத்துவர் கையாள்கிற விதங்களை அறிந்து வியந்திருக்கிறார். அன்றைய கருத்துரை பீட்டர்சனின் மனதில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. டூர்னியர் தான் பேசுகிறபடி வாழ்கிறார், தான் வாழ்கிறபடி பேசுகிறார் என்று உணரமுடிந்தது. மருத்துவரின் அனுபவம் பற்றிச் சொல்வதற்கு ‘கான்குரயன்ஸ்’ (congruence) என்கிற வார்த்தையை பீட்டர்சன் பயன்படுத்துகிறார். கான்குரயன்ஸ் என்றால் இணக்கம். “அவரைப் பற்றிச் சொல்வதற்கு இதுதான் சரியான வார்த்தை” என்கிறார்.

கான்குரயன்ஸ் – “போதிப்பதின்படி செய்வது” அல்லது “போதிப்பதின்படி வாழ்வது” என்று இதற்கு அர்த்தம் உண்டு. யாராவது தான் “ஒளியில்” இருப்பதாகச் சொல்லியும் தன் சதோதரனையோ சகோதரியையோ பகைத்தால் அவர் “இதுவரைக்கும் இருளிலே” இருப்பதாக அப்போஸ்தலனாகிய யோவான் வலியுறுத்துகிறார் (1 யோவா. 2:9). அப்படிப்பட்டவர் பேசுவதும் செய்வதும் இணக்கமாக இருக்காது. அப்படிப்பட்டவன் “தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்” என்று யோவான் சொல்கிறார். வச 11. பேச்சுக்குக்கும் செயலுக்கும் இணக்கமில்லாதவன் “இருளிலே” இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

தேவ வார்த்தையின் வெளிச்சம் நம் பாதையில் பிரகாசிக்கும்படி நாம் அவரோடு நெருங்கி வாழ்வதுதான், இருளில் வாழாமல் நம்மைப் பாதுகாக்கும். அதனால் தேவபக்தியான ஒரு பார்வை கிடைக்கும், அது நம் வாழ்க்கையில் தெளிவையும் இலக்கையும் கொடுக்கும். அப்போது நம் வார்த்தைகளைப் போலவே நம் செயல்கள் இருக்கும். இதை மற்றவர்கள் கவனிக்கும்போது, போகும் இடம் இன்னதென்று அறியாமல் செல்கிறவர்கள் என்று நம்மை பற்றி எண்ணாமல், போகும் இடத்தை தெளிவாக அறிந்திருப்பவர்கள் என்று புரிந்துகொள்வார்கள்.