சம்பவங்களை அருமையாக விவரிக்கும் சிறுவர் வேதாகமத்தைத் திறந்து, என் பேரனுக்கு வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தேன். ஒரு சம்பவத்தில் தேவனுடைய அன்பையும் ஏற்பாட்டையும் பற்றி அருமையாக விவரிக்கப்பட்டிருந்தது. அதை வாசித்தபோது பூரித்தோம். பிறகு வாசிப்பதை சற்றே நிறுத்திவிட்டு, புத்தகத்தைத் திருப்பி மீண்டும் ஒருமுறை தலைப்பை வாசித்தேன்: ‘இயேசுவின் சம்பவம் சொல்லும் வேதாகமம்: ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன’ என்று எழுதப்பட்டிருந்தது.
ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன. ஒவ்வொரு சம்பவமும்.
உண்மையைச் சொன்னால், சிலசமயங்களில் வேதாகமத்தை வாசிக்கும்போது, குறிப்பாக பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது சரியாகப் புரியாது. தேவனை அறியாதவர்கள் அவருடைய மக்களைத் தோற்கடிப்பதுபோலத் தெரியும். தேவன் பரிசுத்தர், அவருடைய நோக்கங்களெல்லாம் நன்மையானவை என்றால், அவ்வளவு கொடுமையை தேவன் எவ்வாறு அனுமதித்தார்?
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, எம்மாவூருக்குச் செல்லும் வழியில் இரண்டு சீடர்களைச் சந்தித்தார். அவர்கள் இயேசுவை அடையாளங்காணவில்லை. தாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த மேசியா மரித்துப் போனாரென ஏமாற்றத்தில் இருந்தார்கள். லூக்கா 24:19-24. “அவரே இஸ்ரவேலை மீட்டுரட்சிப்பவர்” என்று நம்பியிருந்தார்கள். வச 21. இயேசு அவர்களுக்கு மறுநிச்சயத்தைக் கொடுத்தது பற்றி லூக்கா பதிவு செய்கிறார்: “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை (இயேசு) அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (வச. 27).
ஒவ்வொரு சம்பவமும் அவருடைய பெயரைச் சொல்லுகின்றன, புரியக்கடினமான சம்பவங்களும் கூட. ஏனென்றால், நம் உலகம் பெரும் சிதைவுக்கு உள்ளாகியிருப்பதையும் அதிலிருந்து நம்மைக் காப்பாற்ற ஒருவர் தேவை என்பதையும் அவை வெளிப்படுத்துகின்றன. வழிவிலகிப்போன பிரியமான தம் பிள்ளைகளை மனதில்கொண்டு தேவன் ஏற்படுத்தியுள்ள மீட்பை, அதாவது அவர்களை மீண்டும் தம்மிடம் கொண்டுவருகிற வழியைத்தான் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு தலையீடும் சுட்டிக்காட்டுகின்றன.
அன்புள்ள தேவனே, வேதாகமச் சம்பவங்கள் மூலம் நீர் உம்முடைய பெயரை மெல்லிய சத்தத்தோடு சொல்லும்போது, அதை நான் கேட்க உதவும். ஒவ்வொரு சம்பவத்திலும் நான் கேட்க உதவும்.
தேவனுடைய மீட்பின் திட்டம் உங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு நடைபெறுகிறது? எந்தச் சம்பவங்களைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது? அந்தச் சம்பவங்களிலும் தேவன் செயல்படுவதை என்னென்ன வழிகளில் (சிறிதாகக்கூட இருக்கலாம்) நீங்கள் காணமுடிகிறது?