பொறாமைக்கு முற்றுப்புள்ளி
பிரபல ஃப்ரெஞ்ச் ஓவியரான எட்கார் டேகாஸ் என்பவர், பாலே நடனக்குழு மங்கைகளின் ஓவியத்திற்காக உலகப்புகழ் பெற்றவர். ஆனால் தன் சகஓவியரும் நண்பருமான எட்வர்ட் மேனட் மீது அவர் எவ்வளவுக்கு பொறாமை கொண்டிருந்தார் என்பது யாருக்கும் அதிகம் தெரியாது. மேனடைப் பற்றி, “அவன் எதைச் செய்தாலும் உடனே நன்றாக வந்துவிடுகிறது, ஆனால் நான் எவ்வளவுதான் பாடுபட்டாலும் சரியாக வருவதில்லை” என்று டேகாஸ் சொன்னார்.
பொறாமை உணர்வுதான் இதற்கு காரணம். மோசமான குணங்களில் பொறாமையையும் பவுல் பட்டியலிடுகிறார். “அநியாயம், வேசித்தனம், துரோகம், பொருளாசை, குரோதம், பொறாமை, கொலை, வாக்குவாதம், வஞ்சகம், வன்மம்” போன்றவை கேடான சிந்தையால் உண்டாவதாகச் சொல்கிறார் (ரோம. 1:29). தேவனைத் தொழுதுகொள்ளாமல் விக்கிரகங்களைத் தொழுவதால் இத்தகைய சிந்தைகள் உண்டாகின்றன (வச. 28).
விசுவாசிகள் மத்தியில் பொறாமை உருவானால் “மெய்யான ஒரே அன்பைவிட்டு நம்முடைய இருதயங்கள் திசைதிரும்புவதே” அதற்கு காரணமென்கிறார் கிறிஸ்டினா ஃபாக்ஸ். நாம் பொறாமை கொள்ளும்போது, “இயேசுவைப் பார்க்காமல் இவ்வுலகின் கீழ்த்தரமான இன்பங்களை நாடி ஓடுகிறோம். உண்மையில், நாம் யாரென்பதையே மறந்துபோகிறோம்” என்று அவர் சொன்னார்.
ஆனாலும் இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. தேவனிடம் திரும்புங்கள். “உங்களை ஒட்டுமொத்தமாக தேவனிடம் அர்ப்பணியுங்கள்” என்று பவுல் வலியுறுத்துகிறார். பார்க்கவும்: ரோமர் 6:13. குறிப்பாக, உங்களுடைய வாழ்க்கையையும் வேலையையும் அர்ப்பணியுங்கள். தன்னுடைய மற்றொரு நிருபத்தில் பவுல், “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்” என்று எழுதுகிறார். கலாத்தியர் 6:4.
தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக நன்றி. குறிப்பாக, அவருடைய கிருபையின் விடுதலைக்காக நன்றி. தேவன் நமக்குத் தந்திருக்கும் ஈவுகளை வைத்து, நாம் மனரம்மியமாக வாழலாம்.
புயலிலும் அவர் பிரசன்னம்
எங்களுடைய சபையைச் சேர்ந்த ஒருவருடைய வீடு தீ விபத்தில் சிக்கியது. அந்தக் குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர். கணவனும் மகனும் பிழைத்துக் கொண்டார்கள்; மனைவியும் அம்மாவும் இரண்டு சிறிய குழந்தைகளும் அந்த விபத்தில் மரித்துப் போனார்கள். மனதைப் பிளக்கிற இத்தகைய சம்பவங்களை ஓயாமல் கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்ட சம்பவங்கள் நேரிடும் போதெல்லாம் எழும்புகிற கேள்வி, “நல்லவர்களுக்கு ஏன் மோசமான சம்பவங்கள் நேரிடுகின்றன?” என்பதுதான். எல்லாக் காலத்திலும் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காமல்தான் இருந்திருக்கிறது.
சங்கீதம் 46ல் சங்கீதக்காரன் வலியுறுத்துகிற சத்தியமும்கூட எல்லாக் காலங்களிலும் பேசப்படுகிறது, வாக்குத்தத்தமாகப் பார்க்கப்படுகிறது, மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” வசனம் 1. பூமியும் மலைகளும் அதிர்வது, சமுத்திரம் கொந்தளிப்பது என்று பேரழிவுகள் பற்றி 2,3ம் வசனங்கள் பேசுகின்றன. இதுபோன்ற பேரழிவில் சிக்குவதை நினைத்தாலே நமக்கு நடுக்கம் ஏற்பட்டு விடும். சிலசமயங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் உண்மையிலேயே சிக்கிக்கொள்கிறோம். மரணத்தைக் கொண்டுவரும் நோய்கள், கொடிய பணப்பிரச்சனை, நமக்கு பிரியமானவர்களின் மரணம் போன்றவை பேரழிவுகளாக அமைகின்றன.
இப்படிப்பட்ட பிரச்சனைகள் நேரிடும்போது, தேவன் உண்மையில் இருக்கிறாரா என்று யோசிக்கத் தூண்டப்படுகிறோம். அப்படி யோசிக்க அவசியமில்லையென வேதாகமம் கூறுகிறது. “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.” வசனங்கள் 7,11. நம்மால் தாங்கமுடியாத சூழ்நிலைகளின் மத்தியிலும் அவருடைய பிரசன்னம் நம்மோடுகூட இருக்கும். அவர் நல்லவராகவும், அன்புள்ளவராகவும், நம்பிக்கைக்கு பாத்திரராகவும் இருப்பதால் நாம் ஆறுதலடையலாம்.
நம்முடைய பலவீனங்களில்
அனி ஷீஃப் மில்லர் என்கிற பெண்மணி தன்னுடைய 90வது வயதில் 1999ம் ஆண்டு மரித்தார். ஆனால், 1942ம் ஆண்டிலேயே அவர் மரித்திருக்க வேண்டியவர். அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, இரத்தத்தொற்று உண்டானது. அனைத்து சிகிச்சைகளும் தோல்வியடைந்தன. அப்போது அதே மருத்துவமனையிலிருந்த நோயாளி ஒருவர், தனக்கு தெரிந்த விஞ்ஞானி ஒருவர் அற்புதமான ஒரு மருந்தைக் கண்டுபிடித்து வருவதாகக் கூறினார், அந்த மருந்தில் கொஞ்சத்தை அனிக்கு வாங்கித் தரும்படி அரசாங்கத்தை அனியின் மருத்துவர்கள் வற்புறுத்தினார்கள். அந்த மருந்தைக் கொடுத்ததும், ஒரே நாளில் அவருக்கு ஜுரம் நீங்கி, உடல் நிலை சாதாரணமானது! பெனிசிலின் மருந்து அனியின் உயிரைக் காப்பாற்றியது.
விழுதலுக்கு பிறகு, மனிதர்கள் அனைவருமே நாசகரமான ஓர் ஆவிக்குரிய நிலையை அனுபவித்திருக்கிறார்கள். அதற்கு காரணம் பாவம். ரோமர் 5:12. இயேசு மரித்ததும், உயிர்த்தெழுந்ததும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுமே நாம் அதிலிருந்து மீளுவதைச் சாத்தியமாக்கியுள்ளன.ரோமர் 8:1-2. பூமியில் நாம் பரிபூரண வாழ்க்கையை அனுபவித்து மகிழவும், நித்திய வாழ்வில் தேவனுடைய பிரசன்னத்தில்வாழ்ந்து மகிழவும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்கிறார். வசனங்கள் 3-10. “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” வசனம் 11.
உங்களுடைய பாவ இயல்பானது உங்களிடமிருந்து வாழ்க்கையை உறிஞ்சி எடுத்துவிடும் போலத் தோன்றும்போது, இரட்சிப்பின் ஆதாரமாகிய இயேசுவை நோக்கிப்பார்த்து, அவருடைய ஆவியின் வல்லமையால் பெலப்படுங்கள். வசனங்கள் 11-17. “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்;” கூடவே “தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்.” வசனங்கள் 26-27.
வில்லன்களை விடுவித்தல்
காமிக் புத்தக ஹீரோக்கள் எப்போதுமே பிரபலம்தான். 2017ல் மட்டும் ஆறு சூப்பர்ஹீரோ படங்கள், 4 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு பாக்ஸ் ஆபீஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளன. ஆக்சன் ஹீரோ படங்கள் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெறுவதற்கான காரணம் என்ன?
அப்படிப்பட்ட கதைகள் எல்லாமே தேவனுடைய மாபெரிய சரித்திரம் ஒத்திருப்பதே அதற்கு ஒரு காரணமாகும். ஒரு ஹீரோ இருப்பார், ஒரு வில்லனும் இருப்பார், மக்களை அவரிடமிருந்து காப்பாற்றவேண்டும், எனவே பரபரப்பான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
இந்தச் சம்பவத்தில், முக்கிய வில்லன், நம் ஆத்துமாக்களின் சத்துருவாகிய சாத்தான். ஏராளமான “குட்டி” வில்லன்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, தானியேல் புத்தகத்திலுள்ள நேபுகாத்நேச்சார் அப்படிப்பட்டவர்தான். அன்றைய உலகின் பெரும்பகுதியை ஆட்சிசெய்தவர், அவர் ஒரு மாபெரும் சிலையை நிறுவி, அதைத் தொழுதுகொள்ளாத அனைவரையும் கொன்றுபோடத் தீர்மானித்தார். தானி 3:1-6. தைரியமிக்க மூன்று யூத அதிகாரிகள் அதற்கு மறுத்தார்கள். வசனங்கள் 12-18. எரிகிற அக்கினி சூளையிலிருந்து அற்புதமாக தேவன் அவர்களை விடுவித்தார். வசனங்கள் 24-27.
ஆனால் இங்கு எதிர்பாரா ஒரு திருப்பம்; இந்த வில்லனுடைய மனது மாற ஆரம்பிக்கிறது. பிரமிப்பூட்டும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து நேபுகாத்நேச்சார், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னார். வசனம் 28.
அந்த தேவனுக்கு விரோதமாகப் பேசுகிற எவனும் கொல்லப்படுவான் என்றும் மிரட்டுகிறார். வசனம் 29. உண்மையில், அவருடைய உதவி தேவனுக்கு தேவையில்லை என்பதை உணரவில்லை. தேவனைப்பற்றி நேபுகாத்நேச்சார் இன்னும் அதிகமாக அறிந்துகொண்டார் என்பதை 4ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அது வேறு கதை.
நேபுகாத்நேச்சார் ஒரு வில்லன் மட்டுமல்ல, ஆவிக்குரிய பயணத்தை மேற்கொண்டிருந்த ஒருவரும் கூட. தேவனுடைய மீட்பின் சம்பவத்தில், நம்முடைய ஹீரோவான இயேசு, யாரையெல்லாம் காப்பாற்றமுடியுமோ அவர்களை எல்லாம் தேடிச்செல்கிறார். நம் மத்தியில் இருக்கிற வில்லன்களைக் கூட தேடிச் செல்கிறார்.