அனி ஷீஃப் மில்லர் என்கிற பெண்மணி தன்னுடைய 90வது வயதில் 1999ம் ஆண்டு மரித்தார். ஆனால், 1942ம் ஆண்டிலேயே அவர் மரித்திருக்க வேண்டியவர். அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, இரத்தத்தொற்று உண்டானது. அனைத்து சிகிச்சைகளும் தோல்வியடைந்தன. அப்போது அதே மருத்துவமனையிலிருந்த நோயாளி ஒருவர், தனக்கு தெரிந்த விஞ்ஞானி ஒருவர் அற்புதமான ஒரு மருந்தைக் கண்டுபிடித்து வருவதாகக் கூறினார், அந்த மருந்தில் கொஞ்சத்தை அனிக்கு வாங்கித் தரும்படி அரசாங்கத்தை அனியின் மருத்துவர்கள் வற்புறுத்தினார்கள். அந்த மருந்தைக் கொடுத்ததும், ஒரே நாளில் அவருக்கு ஜுரம் நீங்கி, உடல் நிலை சாதாரணமானது! பெனிசிலின் மருந்து அனியின் உயிரைக் காப்பாற்றியது.

விழுதலுக்கு பிறகு, மனிதர்கள் அனைவருமே நாசகரமான ஓர் ஆவிக்குரிய நிலையை அனுபவித்திருக்கிறார்கள். அதற்கு காரணம் பாவம். ரோமர் 5:12. இயேசு மரித்ததும், உயிர்த்தெழுந்ததும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுமே நாம் அதிலிருந்து மீளுவதைச் சாத்தியமாக்கியுள்ளன.ரோமர் 8:1-2. பூமியில் நாம் பரிபூரண வாழ்க்கையை அனுபவித்து மகிழவும், நித்திய வாழ்வில் தேவனுடைய பிரசன்னத்தில்வாழ்ந்து மகிழவும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்கிறார். வசனங்கள் 3-10. “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” வசனம் 11.

உங்களுடைய பாவ இயல்பானது உங்களிடமிருந்து வாழ்க்கையை உறிஞ்சி எடுத்துவிடும் போலத் தோன்றும்போது, இரட்சிப்பின் ஆதாரமாகிய இயேசுவை நோக்கிப்பார்த்து, அவருடைய ஆவியின் வல்லமையால் பெலப்படுங்கள். வசனங்கள் 11-17. “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்;” கூடவே “தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்.” வசனங்கள் 26-27.