நியூஸ்பாய்ஸ் என்கிற கிறிஸ்தவ இசைக்குழுவின் முதன்மை பாடகராக இருந்தவர் பீட்டர் ஃபர்லர். “அவர் அரசாளுகிறார்” என்கிற துதிப்பாடலை தங்களுடைய குழுவினர் பாடும்போது ஏற்பட்ட அனுபவத்தை அவர் சொல்லுகிறார். சகல கோத்திரத்தாரும் தேசத்தாரும் ஒன்றுகூடி, தேவனைத் தொழுதுகொள்வதை அப்படியே தத்ரூபமாக அப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பாடலைப் பாடும்போதெல்லாம் கூடியிருக்கும் விசுவாசிகள் மத்தியில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலை உணரமுடிந்ததாக ஃபர்லர் கூறுகிறார்.
“அவர் அரசாளுகிறார்” பாடலின்போது ஃபர்லர் கண்டு அனுபவித்த அதே அனுபவம் பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் கூடியிருந்த விசுவாசிகள் மத்தியிலும் உண்டானது. சீடர்களை பரிசுத்த ஆவியானவர் நிரப்பியபோது (அப் 2:4), அங்கே விசேஷித்த ஓர் அனுபவம் உண்டானது. அதனால், சகல தேசங்களிலிருந்தும் கூடியிருந்த யூதர்கள் குழம்பிப்போனார்கள்; ஏனென்றால், அங்கே தேவனுடைய கிரியைகள் வெளிப்படும்படிக்கு அவரவர் தங்கள் சொந்த மொழியில் பேசப்படுவதைக் கேட்டனர் . வச 5-6,11. “யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” என்று பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் தேவன் சொல்லியிருக்கிறபடியே நிகழ்வதாக அங்கிருந்தவர்களுக்கு பேதுரு விளக்கினார். வச .16
அனைவரும் பிரமிக்கத்தக்க தேவவல்லமை அங்கு வெளிப்பட்டதினாலே, சுவிசேஷத்தை பேதுரு போதித்தபோது மக்கள் உடனே ஏற்றுக்கொண்டார்கள்; அன்றைய தினத்தில் மட்டும் மூவாயிரம்பேர் மனந்திரும்பினார்கள். வச 41. இந்த அற்புதமான ஆரம்பத்துடன், தங்கள் தங்கள் பகுதிக்குத் திரும்பிச்சென்ற புதிய விசுவாசிகள், அங்கே சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
அந்த நற்செய்தி இன்றும் எதிரொலித்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் தேவன் தருகிற நம்பிக்கையின் செய்தி அது. நாம் ஒன்றுசேர்ந்து தேவனைத் துதிக்கும்போது, அவருடைய ஆவியானவர் நம் மத்தியில் அசைவாடுவார், சகல தேசங்களிலுள்ள மக்களிலும் அற்புதமான ஓர் ஐக்கியத்தை உண்டாக்குவார். அவர் அரசாளுகிறார்!
மற்றவர்களிடம் என்னென்ன விதங்களில் தேவசாயலைப் பார்க்கிறீர்கள்? சகல கோத்திரத்தாரையும் ஜனங்களையும் இயேசு பார்ப்பதுபோலவே பார்ப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
அன்புள்ள பரலோக பிதாவே, நீர் சிருஷ்டித்துள்ள மக்கள் அனைவரிடமும் உம்மைப் போலவே நாங்கள் நடந்துகொள்ள எனக்கு உதவும்.