சிகிச்சைக்காக உடற்பயிற்சி நிபுணரைச் சந்தித்தார் டார்னெல். விபத்திலிருந்து சில மாதங்களுக்கு முன் குணமடைந்திருந்தார். எனவே, உடற்பயிற்சி நிபுணர் கொடுக்கும் பயிற்சிகளின்போது அதிகமாக வலிக்கும் என்பது சந்தேகமின்றி தெரிந்தது. பலநாட்களாக நீட்டி, மடக்காதிருந்த பகுதிகளை நிபுணர் நீட்டி, மடக்கிவிட்டு, “இப்போது ஓய்வு எடுங்கள்” என்று சொன்னார். அந்த அனுபவம் பற்றிச் சொல்லும்போது, குறைந்தபட்சம் ஐம்பது முறையாவது “சரி, இப்போது ஓய்வு எடுங்கள்” என்று நிபுணர் சொல்லியிருப்பாரென்று கூறினார். 

தன்னுடைய மொத்த வாழ்க்கைக்கும் அந்த வார்த்தைகள் பொருந்தக்கூடியவை என்று டார்னெல் கூறுகிறார். கவலைப்படுவதை விட்டுவிட்டு, தேவன் நல்லவர், உண்மையுள்ளவர் என்பதை உணரும்போது அவரால் ஓய்வு எடுக்க முடிந்ததாம்.

சிலுவை மரணம் நெருங்கியிருந்த நிலையில், தம்முடைய சீடர்கள் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வது அவசியமென இயேசு உணர்ந்தார். அவருடைய மரணத்திற்கு பிறகு சீடர்கள் பல உபத்திரவங்களையும் துயரங்களையும் சந்திக்கவேண்டியிருக்கும் என்று அறிந்து, அவர்களோடு வாசம்பண்ணவும், தாம் போதித்ததை அவர்களுக்கு நினைவூட்டவும் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாகச் சொல்லி, இயேசு அவர்களை ஊக்கப்படுத்தினார் (யோவா. 14:26). “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; … உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக” என்றும் சொன்னார் (வச. 27).

நம் அனுதின வாழ்வில் நமக்கு இக்கட்டுகளை ஏற்படுத்துகிற விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால்  தேவனை அதிகமாக நம்பவேண்டும். அப்போது தம்முடைய ஆவியானவர் நமக்குள் வாசஞ்செய்வதையும், அவர் தம்முடைய சமாதானத்தை நமக்கு அருளுவதையும் அவர் நமக்கு நினைவூட்டுவார். தேவனிடமிருந்து நாம் பெலனைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த உடற்பயிற்சி நிபுணர் சொன்னதுபோல “சரி, இப்போது நீ ஓய்வு எடுக்கலாம்” என்று அவர் சொல்வதை நாம் கேட்கலாம்.