கொலராடோவில் உள்ள மலைகள் கண்ணுக்கு விருந்தளிப்பவை. என் கல்லூரி நாட்களில், கோடை விடுமுறையின்போது அங்கிருக்கும் விருந்தினர் பண்ணை ஒன்றில் நான் வேலைசெய்வதுண்டு. அங்கு எனக்கு இராக்காவல் பணி. சுழற்சி முறையில் நாங்கள் வேலை செய்வோம். பண்ணையில் தங்கும் விருந்தினர்களைப் பாதுகாக்கும் விதத்தில், காட்டுத்தீ பரவினால் அதுகுறித்து எச்சரிப்பதுதான் எங்களுடைய வேலை. ஆரம்பத்தில் அது களைப்பூட்டுகிற, செய்நன்றியறியாத ஒரு வேலையாகத் தெரிந்தது. பிறகுதான் நான் அமர்ந்திருந்து, தேவ பிரசன்னத்தின் மகத்துவத்தை எண்ணிப்பார்த்து, ஆறுதலடைவதற்கான ஓர் அற்புதமான அனுபவமாக அது அமைந்தது.

ராஜாவாகிய தாவீது தேவபிரசன்னத்திற்காக ஏங்கினார் (சங்கீதம் 63:1), தன் படுக்கையிலும் “இராச்சாமங்களிலும்” தேவபிரசன்னத்தை வாஞ்சித்தார் (வச 6). தாவீது கலக்கத்தில் இருந்தார் என்பதை அந்தச் சங்கீதம் அப்பட்டமாகத் தெரிவிக்கிறது. தன் மகன் அப்சலோம் செய்த கலகம்தான் அந்தக் கலக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கவேண்டும். ஆனாலும் தேவனுடைய “செட்டைகளின் நிழலில்,” அவருடைய வல்லமையிலும் பிரசன்னத்திலும் ஆதரவும் புத்துணர்வும் கிடைக்கிற தருணமாக அந்த இரவு மாறியது. வசனம் 7.

உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனையோ நெருக்கடியோ இருக்கலாம், இராக்காவல்கள் உங்களுக்கு ஆறுதலளிக்காமல் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையின் “அப்சலோம்கள்” உங்களுடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் மிகுந்த பாரத்தை உண்டாக்கியிருக்கலாம். அல்லது குடும்பச்சுமை, வேலைச்சுமை, பணச்சுமை போன்றவை உங்களுடைய இளைப்பாறுதலின் நேரத்தைப் பாரமாக்கலாம். தூக்கத்தைக் கெடுக்கும் இத்தகைய தருணங்கள் தேவனை நோக்கிக் கூப்பிடவும், அவரைப் பற்றிப் பிடித்துக்கொள்ளவும் உதவட்டும். அவருடைய அன்பின் கரம் உங்களைத் தாங்கும்படி அனுமதியுங்கள். வசனம் 8.