அவள் ஒரு இளம்பெண்.  பழுப்பு நிறத்தில் அழகாக இருப்பாள்.  திடீரென தோல் நிறம் மாற ஆரம்பித்தது.  தன் ‘வாழ்க்கையே’ தொலைந்துபோனதாக நடுங்கிப்போனாள்.  அவளுக்கு வெண்குஷ்டம் வந்திருந்தது. மெலனின் என்கிற நிறமிதான் தோலுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. மெலனின் குறையும்போது வெண்படலம் உண்டாகிறது.தோலின் வெண்படலங்களை மறைப்பதற்காக அதிகமாக மேக்கப் போட ஆரம்பித்தாள்.

பிறகு ஒருநாள், “நான் ஏன் மறைக்கவேண்டும்?” என்று யோசித்துப் பார்த்தாள். தேவ பெலத்தைச் சார்ந்திருக்கத் தீர்மானித்தாள். அதிகமாக மேக்கப் போடுவதை நிறுத்தினாள். அவளிடம் காணப்பட்ட தன்னம்பிக்கை மற்றவர்களைத் திரும்பிப்பார்க்க வைத்தது. அதனால், உலகளாவிய அழகுசாதன பிராண்ட் ஒன்றின் முதல் வெண்குஷ்ட விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டாள்.

“இது ஓர் ஆசீர்வாதம்” என்று தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும்போது கூறினாள். அந்த இக்கட்டான நேரத்தில் விசுவாசம் அவளைத் தாங்கியது; குடும்பத்தாரும் நண்பர்களும் உதவியாக இருந்தார்கள்.

இந்தப் பெண்ணின் சம்பவத்தை வாசிக்கும் வேளையில், நாம் அனைவரும் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதை நினைத்துப் பார்ப்பது முக்கியம். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27). வெளித்தோற்றத்தில் நாம் வேறுபடலாம். ஆனால், நாம் எல்லாரும் தேவ சாயலைப் பெற்றவர்கள். அவர் நம்மைச் சிருஷ்டித்தார், அவருடைய மகிமையை நாம் பிரதிபலிக்கிறோம். இயேசுவை விசுவாசிக்கிற நாம், இந்த உலகத்தில் அவரைப் பிரதிபலிக்கும்படி நாளுக்கு நாள் மறுரூபமாக்கப்படுகிறோம்.

உங்களுடைய தோலின் நிறம் உங்களைச் சங்கடப்படுத்துகிறதா? இன்று, கண்ணாடியின்முன் நில்லுங்கள். உங்களைப் பார்த்து தேவனுக்காக சிரியுங்கள். ஏனென்றால், தேவனல்லவா உங்களை தம்முடைய சாயலில் சிருஷ்டித்திருக்கிறார்.