“முடிந்தவரை வேகமாக போ”. டைனோசார் மூர்க்கத்தனமாக விரட்ட, இவ்வாறு சொல்லுவார் டாக்டர் இயன் மால்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெஃப் கோல்ட்பிளம். அவரும் வேறு இருவரும் ஒரு ஜீப்பில் இருப்பார்கள். 1993ல் வெளிவந்த ஜுராசிக் பார்க் படத்தின் பிரபலமான காட்சி இது. ஜீப்பின் ஓட்டுனர் பின்காட்டியில் பார்ப்பார், அங்கே, டைனோசாரின் கோரப்பற்கள் தெரியும். அந்தப் பிம்பத்திற்கு கீழே “கண்ணாடியில் தெரியும் பொருள் காட்டப்படுவதைவிட பக்கத்தில் உள்ளது” என்கிற வாசகம் இருக்கும்.
தீவிரத்தையும் கடுமையையும் சினிமா ரீதியில் தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் காட்சி அது. சிலசமயங் களில் கடந்தகால “கொடிய விஷயங்கள்” நம்மைத் துரத்திக் கொண்டே இருப்பதுபோல உணர் வோம். பின்கண்ணாடியில் பார்த்தால் நம் கடந்தகால வாழ்க்கையும் தவறுகளும்தான் அவை என்பது தெரியும். அவமானத்தாலும் குற்றவுணர்வாலும் அவை நம்மை கொன்றேவிடும்போலத் தோன்றும்.
கடந்தகாலம் நம்மை முடக்கிபோட வல்லதென பவுல் அறிந்திருந்தார். அவரும்கூட கிறிஸ்துவின் உதவியின்றி, பரிபூரணமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு பல வருடங்கள் முயன்றார், அதற்காக கிறிஸ்தவர்களையும் உபத்திரவப்படுத்தினார் (பிலி. 3:1-9). அப்படிப்பட்ட கடந்தகாலத்தை நினைத்து வருந்தியிருப்பாரானால் நிச்சயமாக முடங்கியிருப்பார்.
ஆனால், கிறிஸ்துவோடு உறவு வைப்பதில் ஓர் அற்புதமும் வல்லமையும் இருந்தது. தன் கடந்தகால வாழ்க்கையைத் தூக்கியெறிந்தார் (வச. 8-9). விசுவாசத்தோடு வாழ்வதற்கான விடுதலையை அது தந்தது. பின்னோக்கிப் பார்த்து பயத்திலும் அல்லது மனவருத்தத்திலும் இருக்கவில்லை. “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” (வச. 13-14).
கிறிஸ்து நம்மை மீட்டெடுத்தார். எனவே அவருக்குள் விடுதலையுள்ளவர்களாக வாழலாம். “நம் கண்ணாடியில் தெரிகிற பொருட்கள்” நம் வழியைத் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.
பிதாவே, சில சமயங்களில் பிற்கால தவறுகள் நம்மை விடுவதில்லை. இயேசுவினால் நாம் புது சிருஷ்டிகளான பின், நாம் வருத்ததோ, பயமோ அடைந்து வாழ வேண்டுவதில்லை என்பதை மறந்து வாழ உதவும்.
வாழ்க்கையின் பிரச்சனைகளை அணுகுவதற்கு, பாவமன்னிப்பு பற்றி பவுல் வலியுறுத்துகிற சத்தியங்கள் எவ்வாறு உதவுகின்றன? கடந்தகால தவறுகள் உங்களை வதைத்துக் கொண்டிருந்தால், அவற்றை மேற்கொள்வதற்கு யாரிடம் போய் நீங்கள் பேசவேண்டும்?