இந்தோநேஷியாவிலுள்ள போதகர்களுக்கு ஒரு வேதாகம வழிகாட்டியை எழுதிக்கொண்டிருந்த போது, எழுத்தாளரும் நண்பருமான அவர் அந்த நாட்டினர் ஒற்றுமையோடு செயல்படும் கலாச்சாரத்தைக் குறித்து வியந்து எழுதியிருந்தார். கோடாங் ரோடாங் என்று அழைக்கப்படும் “ஒருவருக்கொருவர் உதவியாயிருத்தல்” என்ற கொள்கையை கிராமங்களிலும், பட்டணங்களிலும் செயல்படுத்துகின்றனர். கிராமங்களில் அருகிலுள்ளவர்கள் இணைந்து மற்றொருவருடைய கூரையைச் சரிபார்த்தல், ஒரு பாலத்தைத் கட்டுதல், அல்லது பாதை அமைத்தல் போன்ற வேலைகளைச் செய்கின்றனர். பட்டணங்களிலிருப்பவர்கள் மற்றவர்களுக்குத் துணையாக ஏதாவது இடங்களுக்குச் செல்லல், அல்லது மருத்துவமனைக்குத் துணையாகச் செல்வது போன்ற வேலைகளைச் செய்கின்றனர். அது அவர்களுடைய கலாச்சாரத்தோடிணைந்துள்ளது. எனவே ஒருவரும் தனியாக இருப்பதாக நினைப்பதேயில்லை என்றார்.
உலக முழுவதிலும் இயேசுவின் விசுவாசிகள் ஒருபோதும் தனிமையிலிருப்பதில்லை என்பதால் மகிழ்ச்சியோடிருக்கின்றனர். நம்மோடு எப்பொழுதும் துணையாகத் தொடர்ந்து இருப்பவர் பரிசுத்த ஆவியானவர், திரித்துவத்திலுள்ள மூன்றாம் நபர். கிறிஸ்துவைப் பின்பற்றுகின்ற ஒவ்வொருவரோடும் இருந்து எப்பொழுதும் உதவும்படி, எந்த உலக நண்பனையும் விட மேலான நண்பனாக தேவ ஆவியானவரை நம்முடைய பரலோகத் தந்தை கொடுத்துள்ளார் (யோவா. 14:16).
இயேசுகிறிஸ்து இவ்வுலகில் தன்னுடைய வாழ்வை முடித்த போது, பரிசுத்த ஆவியானவர் நமக்குத் துணையாக வருவார் என வாக்களித்தார். “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்” (வச. 18) என்றார். “அந்த சத்திய ஆவியானவர்… உங்களுடமே வாசம் பண்ணி உங்களுள்ளேயிருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள் (வச. 17). கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட அனைவருக்குள்ளும் அவர் வாசம் பண்ணுகின்றார்.
பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுபவராக, நம்மைத் தேற்றுபவராக, ஊக்குவிப்பவராக ஆலோசகராக எப்போதும் நம்மோடிருக்கும் துணையாளருமாயிருக்கிறார். இவ்வுலகில் வாழும் அநேகர் தனிமையால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, நாம் எப்பொழுதும் அவர் தரும் ஆறுதலான அன்பினையும், உதவியையும் சார்ந்து கொள்வோம்.
கிறிஸ்தவ விசுவாசியாகிய நீ, பரிசுத்த ஆவியானவர் உன்னுள் ஜீவிக்கிறார் என்பதை அறிந்து எப்படி ஊக்குவிக்கப்படுகிறாய்? உன் வாழ்வின் எந்தப் பகுதியில் நீ தேவனின் ஆறுதலையும், உதவியையும் உதாசீனப்படுத்துகிறாய்?
நம்மை விட்டு என்றும் விலகாத துணையாளராகிய பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் நம்மோடிருப்பார் என இயேசு நமக்கு வாக்களித்துள்ளார்.