பாரம்பரியம் நிறைந்த வழியும் ஓர் ஆலயத்தில் நான் வளர்ந்தேன். ஒரு குடும்பத்தில் அன்புக்குரியவர் இறந்தாலோ, அல்லது ஒரு நண்பர் மரித்தாலோ அங்கு ஒரு பாரம்பரியம் வந்து விடும். ஆலயத்தின் ஒரு இருக்கையில் அல்லது ஆலயத்திற்கு முன் பகுதியில் ஓர் ஓவியம், அல்லது ஒரு பித்தளை தகட்டில் “…ன் நினைவாக” என்று மரித்தவரின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நான் அந்த நினைவுச்சின்னங்களை மதிப்பதுண்டு. இப்பொழுதும் மதிக்கின்றேன். ஆனாலும் அவை எனக்குள் ஏதோவொரு இடைவெளியை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை அசைவதில்லை, உயிரற்ற பொருட்கள், உண்மையில் சொல்லப்போனால் அவை உயிரோடு இல்லை. நாம் ஏதாவது ஒரு வகையில் அந்த நினைவுச்சின்னங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா?
தன்னுடைய உயிர் நண்பன் யோனத்தான் மரித்த போது, தாவீது அவனை எப்பொழுதும் நினைவில் கொள்ள விரும்பினான். அவன் தான் கொடுத்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்ற விரும்பினான் (1 சாமு. 12-17). உயிரற்ற ஏதோவொன்றைத் தேடுவதற்குப் பதிலாக, உயிருள்ள ஒன்றைத் தேடிப் பிடிக்கின்றான், தாவீது அது யோனத்தானின் மகன் (2 சாமு. 9:3). இங்குதான் தாவீதின் திட்டம் செயல்பட ஆரம்பிக்கின்றது. அவன் தன் இரக்கத்தை (வச. 1) அந்த மகன் மேவிபோசேத்துக்குக் காட்டுகின்றான் (வச. 6-7). அவனுடைய தந்தையின் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் அவனுக்குக் கொடுக்கின்றான். அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அப்பமும் தண்ணீரும் கொடுக்கின்றான். “நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய்” என்றான்.
நாம் நினைவுப் படங்களையும், தகடுகளில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் பார்த்து மரித்தவர்களை நினைவுகூர்வதற்குப் பதிலாக தாவீதின செயலைப் பின்பற்றுவோம். நம்மைவிட்டு கடந்து சென்றவர்களின் குடும்பத்தில் இன்னும் உயிரோடிருக்கின்றவர்களுக்கு இரக்கத்தைக் காட்டுவோம்.
இயேசுவே, மற்றவர்கள் எனக்குக் காட்டிய இரக்கத்தை நானும் காட்ட எனக்கு பெலன் தாரும், ஏனெனில் அதுதான் உம்முடைய பெரிதான இரக்கத்தின் முக்கியத்துவம்.
யாருடைய பரிவு உன்னால் மறக்கக் கூடாததாகவுள்ளது? அந்த நபரின் நினைவாக, அவரைப் போன்றுள்ள வேறு யாருக்கு உன்னுடைய இரக்கத்தைக் காட்ட முடியும்?