தன்னுடைய கணவனையோ அல்லது மனைவியையோ ஏமாற்றுபவர்களின் மீது லிசா எந்தவொரு அனுதாபமும் காட்டுவதில்லை. ஆனால், அவள் தன்னுடைய திருமணத்தில் விரக்தியடைந்தவளாய், வேறொரு கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டபோது அதை எதிர்த்துப் போராடினாள். அந்த வேதனை நிறைந்த அநுபவம், அத்தகையோரிடம் இரக்கம் காட்டும்படி அவளுக்கு உதவியதோடு, “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன்” (யோவா. 8:7) என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை இன்னும் ஆழமாகப் புரிந்து கௌ;ளவும் உதவியது.
இயேசு, தேவாலயத்தின் பிரகாரங்களில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது இந்த வார்த்தைகளைக் கூறினார். வேதபாரகரும், பரிசேயருமாகிய ஒரு கூட்டம், விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இழுத்து வந்து இயேசுவுக்கு முன்பாக நிறுத்தி, “இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர்” (வச. 5) என்று கேட்டனர். அவர்கள் தங்களுடைய அதிகாரத்திற்கு ஓர் ஆபத்தாகவே இயேசுவைக் கருதியதால் அவரைக் குற்றம் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு இக்கேள்வியைக் கேட்டனர் (வச. 6). ஆனால், இயேசு, “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” என்று பதில்கூறிய போது, அவளைக் குற்றம்சாட்டிய ஒருவனும் அவளைக் கல்லெறிய முன்வரவில்லை. ஒருவர் பின் ஒருவராகப் போய் விட்டனர்.
நாம் நமது பாவங்களைக் குறித்து மிகவும் லேசாகக் கருதிக் கொண்டு மற்றவர்களின் நடத்தையைக் குறித்து நியாயந்தீர்க்க வருமுன், “நாம் எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களாகிறோம்” (ரோம. 3:23) என்ற வேத வாக்கியத்தை நினைவில் கொள்வோம். குற்றவாளி எனத் தீர்ப்பிடுவதற்குப் பதிலாக, நமது இரட்சகர் இந்தப் பெண்ணிற்கும், உனக்கும் எனக்கும் கிருபையையும், நம்பிக்கையையும் தருகின்றார் (யோவா. 3:16, 8:10-11) நாமும் பிறருக்கு இந்த நம்பிக்கையையும் கிருபையையும் காட்டுபவர்களாக இருப்போம்.
அன்புள்ள கர்த்தரே நீர் எங்களை நேசிப்பதற்காய் நன்றி. நாங்கள் மற்றவர்கள் மீது இரக்கம் காட்டவும், மனதுருக்கத்துடன் சொல்லிலும், செயலிலும் செயல்பட உதவும்.
யோவான் 3ல் கற்றுக் கொண்ட பாடத்தைச் செயலில் காட்டி, எப்படி நாம் பிறரிடம் நடந்து கொள்ளலாம்? உன்னுடைய சொந்த அநுபவங்களைப் போன்று, சவால்களைச் சந்திக்கின்ற மற்றவர்களுக்கு நீ எவ்வாறு உதவலாம்?