பசியின் வேதனை என் வயிற்றையும் நரம்புகளையும் திருக ஆரம்பித்தது. நாம் தேவனை நோக்கி ஒருமனத்தோடு பார்க்க, உபவாசம் ஒருவழியென என்னுடைய போதகர் கூறினார், அந்த நாள் நிறைவடையும் போது நான் வியப்பில் ஆழ்ந்தேன். எப்படி இயேசுவால் இதனை நாற்பது நாட்களுக்கு நிறைவேற்ற முடிந்தது? நான் பரிசுத்தாவியானவருடன் இணைந்து சமாதானம். பெலன், பொறுமையைப் பெற்றுக்கொள்ளும்படி போராடி ஜெபித்தேன். பொறுமைக்காக மன்றாடினேன்.

நம்மால் உடல் ரீதியாக உபவாசிக்க முடியுமானால், உபவாசம் நமக்கு ஆவிக்குரிய உணவின் முக்கியத்துவத்தைக் கற்று தர முடியும். இயேசு கூறியதைப் போன்று “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத். 4:4). நான் என்னுடைய அநுபவத்திலிருந்து, உபவாசத்தினால் மட்டும் தான் நாம் தேவனைக் கிட்டி சேர முடியும் என்பதாக அல்ல என்று தெரிந்து கொண்டேன்.

சகரியா தீர்க்கதரிசியின் மூலம் தேவன் தன் ஜனங்களிடம் அவர்கள் உபவாசம் செய்யும் முறை பயனற்றது என்கின்றார். ஏனெனில், அது அவர்களை ஏழைகளுக்கு இரங்கும்படி வழிநடத்தவில்லை என்கின்றார். “நீங்கள் எனக்கென்று தானா உபவாசம் பண்ணினீர்கள்?” (சக. 7:5) என்று கேட்கின்றார்.

இங்கே அடிப்படை பிரச்சனை அவர்களது வயிறு அல்ல, அவர்களுடைய இரக்கமற்ற இருதயமே என்பதை தேவனுடைய கேள்வி நமக்கு வெளிப்படுத்துகின்றது. தங்களையே அவர்கள் கவனித்துக் கொண்டிருப்பதால் அவர்களுடைய இருதயம் தேவனைவிட்டு வெகு தூரத்திலுள்ளது என்கின்றார். எனவே, “நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து அவனவன் தன் தன் சகோதரனுக்குத் தயவும், இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும், பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும்… இருங்கள்” என்றார் (வச. 9-10).

நம்முடைய எந்த ஆவிக்குரிய ஒழுங்கின் நோக்கமும் இயேசுவைக் கிட்டிச் சேர்வதேயாகும். நாம் இயேசுவைப் போல மாறும்போது, அவர் அன்பு செய்கின்றவர்களை நாமும் நேசிக்கும் ஓர் இருதயத்தைப் பெற்றுக்கொள்வோம்.