“ஆ, ஒவ்வொரு துறைமுகமும் ஓர் ஏக்கம் நிறைந்த கல்! என்பது போர்;ச்சுகீசைக் சேர்ந்த பெர்னான்டோ பெஸ்ஸாவோ எழுதிய “ஓட் மார்டிமா” என்ற கவிதையின் ஒருவரி. ஒரு கப்பல் துறைமுகத்தை விட்டு மெதுவாக நகர்ந்து செல்லும் போது அதை வழியனுப்புபவர்களின் மனதில் ஏற்படும் உணர்வுகளைச் சுமந்து நிற்பது பெஸ்ஸாவோவின் துறைமுகம். கப்பல் நகர்ந்து சென்றாலும் அந்த பாலம் அதேஇடத்திலிருந்து, நம்பிக்கை, கனவுகள், பிரிவுகள் மற்றும் ஏக்கங்களைச் சுமந்து கொண்டிருக்கும் நினைவுச்சின்னமாயிருக்கின்றது. நாம் மறைந்து போனதையும், நம்மால் அடைய முடியாதவற்றையும் நினைத்து வேதனையடைகின்றோம்.
போர்ச்சுகீசிய மொழிபெயர்ப்பில் “ஏக்கம்” என்பதை ‘வீட்டு நினைவு’ என்கின்றனர். அது ஓர் ஆழ்ந்த வேதனை. இந்த விளக்கமுடியாத உணர்வை கவிஞர் தன் கவிதையில் விளக்குகின்றார்.
நேபோ மலையை மோசேயினுடைய “ஏக்கம் நிறைந்த கல்” எனக் குறிப்பிட முடியும். இந்த மலையிலிருந்து மோசே வாக்களிக்கப்பட்ட தேசத்தை, தன்னால் போக முடியாத ஓரிடத்தைப் பார்க்கின்றார். “இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அவ்விடத்துக்குக் கடந்து போவதில்லை” என்று தேவன் கூறினார் (உபா. 34:4). இது மிகவும் கொடுமையாகத் தோன்றுகிறது. நாம் இதனை இந்தக் கண்ணோட்டத்துடன் பார்த்தோமேயானால் என்ன நடக்கிறது என்பதன் உட்கருத்தைப் புரிந்துகொள்ள மாட்டோம். தேவன் மோசேக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தருகின்றார். இதைத் தான், இந்த தேசத்தை நான் ஆபிரகாம், ஈசாக்கு, மற்றும் யாக்கோபிற்கு கொடுப்பேனென வாக்களித்தேன் (வச. 4) “நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன்” என்று வாக்களித்தார். சீக்கிரத்தில் மோசே நேபோ மலையை விட்டு கானானையும் விட மிகச் சிறந்த தேசத்திற்குச் சென்றுவிடுவான் என்றார் (வச. 5).
நம்முடைய வாழ்விலும் நாம் அநேகமுறை கப்பல் ஏறும் தளத்தில் நின்று, நமக்கு அன்பானவர்கள் பிரிந்து செல்வதையும், நம்பிக்கை மங்கிப் போவதையும், கனவுகள் சிதறிப்போவதையும் காண்கின்றோம். இவற்றின் மத்தியில் ஏதேனின் அழகையும், பரலோகத்தின் சிறிய காட்சியையும் காண முடிகிறது. நம்முடைய ஏக்கங்கள் நம்மை தேவனுக்கு நேராகத் திருப்புகின்றது. நம் ஏக்கங்களை நிறைவேற்றுபவர் அவரே.
உன்னிலுள்ள நிறைவேறாத ஏக்கங்கள் எவை? வாழ்வில் எந்த இடங்களில் தவறான காரியங்களால் உன்னை திருப்திபடுத்த முயற்சிக்கின்றாய்? உன்னுடைய ஏக்கங்களை நிறைவேற்ற தேவன் ஒருவராலேயே முடியும் என்பதை எப்படி கண்டு கொண்டாய்?
என் வாழ்வின் இனிமையான அனுபவம் அந்த ஏக்கம் - எல்லாவித அழுகும் பொருந்திய அந்த கன்மலையைக் காண்பதுதான் - சி.எஸ் லூயிஸ்