1840 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட ஐரீஷ் உருளைக்கிழங்கு பஞ்சத்தின் அழிவிற்குத் தப்பித்துக்கொள்ள அட்லாண்டிக் சமுத்திரத்தை தைரியமாகக் கடக்க முயன்றவர்களை நினைவுகூரும் வண்ணமாக போஸ்டன் மாஸசுஸெட் என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டிற்கு “கண்ணீரின் பாதையைக் கடத்தல்” எனத் தலைப்பிட்டிருந்தனர். அந்தப் பேரழிவின் போது கோடிக்கும் மேலான மக்கள் மரித்தனர். இன்னும் ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு சமுத்திரத்தைக் கடக்க முயற்சித்தனர். அதனை ஜான் பாயில் ஓ ரேலி கவிதையில் “கண்ணீர் நிரம்பிய கிண்ணம்” எனக் குறிப்பிட்டார். பசியாலும், மன வேதனையாலும் விரட்டப்பட்ட இந்தப் பிரயாணிகள் தங்களுடைய அவல நிலையில் ஏதாவது நம்பிக்கை கிடைக்காதா எனத் தேடினர்.
சங்கீதம் 55ல் தாவீது எவ்வாறு நம்பிக்கையைத் தேடிப் பெற்றுக் கொண்டாரெனப் பகிர்ந்து கொள்கின்றார். அவர் சந்தித்த அச்சுறுத்தல் எப்படிப்பட்டது என நாம் தெரிந்து கொள்ளாவிடினும், அந்த அநுபவத்தின் ஆழம் அவரை எவ்வளவு உடைந்து போகச் செய்தது என்பதை நாம் உணரச் செய்கின்றது (வச. 4-5). அவருடைய உள்ளம் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்கின்றது. “ஆ, எனக்குப் புறாவைப் போல் சிறகுகள் இருந்தால் நான் பறந்து போய் இளைப்பாறுவேன்” (வச. 6) என ஜெபித்தார்.
தாவீதைப் போன்று நாமும் வேதனை மிகுந்த நாட்களில் பாதுகாப்பான இடத்திற்குப் பறந்து சென்றுவிடலாம் என எண்ணுவதுண்டு அவர் யோசித்துப் பார்த்து, தன்னுடைய இருதய வேதனையிலிருந்து தப்பி வேறெங்கும் போகாமல் தேவனிடம் ஓடிப்போவதையே தேர்ந்து கொண்டார். அவர், “நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்இ கர்த்தர் என்னை இரட்சிப்பார்” (வச. 16) எனப் பாடுகின்றார்.
துன்பங்கள் வரும்போது நம்முடைய பயத்தினூடேயும், இருண்ட நேரங்களிலும் நம்முடைய ஆறுதலின் தேவன் நம்மைச் சுமந்து செல்ல வல்லவராயிருக்கிறார் என்பதை நினைத்துக் கொள். அவர் தாமே நம்முடைய கண்ணீர் யாவையும் துடைப்பார். (வெளி. 21:4) என்று வாக்களித்துள்ளார். இந்த வாக்குறுதியால் பெலன் பெற்று நம் கண்ணீரின் மத்தியிலும் அவரை உறுதியாக நம்புவோம்.
பிதாவே, வாழ்க்கை தாங்கமுடியாத நிலையிலும், பலத்தைத் தாரும். உம் பிரசன்னத்தையும் ஆறுதலையும் தாரும். நீரில்லாமல் என்னால் வாழமுடியாது. ஏன் கண்ணீரைத் துடைப்பதற்காக நன்றி.
என்ன காரியம் உன்னை ஓடும்படி செய்கின்றது? துன்பங்கள் வரும்போது என்ன செய்யும்படி தூண்டப்படுகின்றாய்?